Mariselvaraj Pt web
தமிழ்நாடு

”இந்த சூடான இரத்தத்தின் கதையை..” - நங்குநேரி கொடூர சம்பவம் குறித்து இயக்குநர் மாரி செல்வராஜ் ட்வீட்!

பாதிக்கப்பட்ட மாணவர் விரைவில் குணமடைய வாழ்த்துவதாகவும், சாதிதான் சமூகம் என்றால் வீசும் காற்றில் விசம் பரவட்டும் - ஜி.வி.பிரகாஷ்

Angeshwar G

தீண்டாமை ஒரு பாவச்செயல்.. தீண்டாமை ஒரு பெருங்குற்றம்.. தீண்டாமை ஒரு மனிதத்தன்மை அற்ற செயல்.. இவ்வாசகங்கள் பள்ளி மாணவர்களின் பாடப்புத்தகங்களில் இடம் பெற்றிருக்கும். பன்னெடுங்காலமாக சாதிய சிந்தனையில் ஊறிப்போன சமூகத்தை சீர்திருத்தும் முயற்சியை பள்ளி மாணவர்களிடம் இருந்து தொடங்கினால் தான் அடுத்த தலைமுறை சாதிய மனோபாவத்தில் இருந்து வெளிவரும் என்பது மறுக்க முடியாத உண்மை. ஆனால், நடைமுறையில் நடக்கும் சம்பவங்கள் சாதியின் பிடியில் மாணவர்கள் அதிகளவில் சிக்கி இருப்பதையே காட்டுகிறது.

நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த 17 வயதான பட்டியலின இளைஞர் தனது பகுதியின் அருகிலேயே உள்ள பள்ளியில் 12 ஆம் வகுப்பு பயின்று வந்துள்ளார். பள்ளியில் அவருக்கும் வேறு மாணவருக்கும் இடையில் தகராறு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக சில தினங்கள் வீட்டிலேயே இருந்துள்ளார். பின் மீண்டும் பள்ளிக்கு சென்ற மாணவரிடம் இது குறித்து விசாரிக்கையில் பிற மாணவரால் தொந்தரவுக்கு உள்ளானது தெரிய வந்துள்ளது. இதனைத் தொடர்ந்து ஆசிரியர் மற்ற மாணவர்களை அழைத்து எச்சரித்துள்ளனர்.

இதனை அடுத்து பள்ளி முடிந்து மீண்டும் அந்த மாணவரை அவர்கள் மிரட்டியுள்ளனர். தொடர்ந்து கடந்த 9 ஆம் தேதி இரவு 10.30 மணியளவில் பட்டியலின மாணவரின் வீடு புகுந்த பிற மாணவர்கள் அவரை சரமாரியாக வெட்டியுள்ளனர். அதைத் தடுக்க முயன்ற தங்கைக்கும் வெட்டுகள் விழுந்துள்ளது. இருவரையும் மீட்ட அக்கம்பக்கத்தினர் அவர்களை மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். பேரன் தாக்கப்படுவதைக் கண்ட தாத்தாவும் அவரை காப்பாற்ற முயல அவர் தள்ளிவிடப்பட்டு கீழே விழுந்தததால் தான் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

வீடு புகுந்து வெட்டியும் காவல்துறையினர் முறையான நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி முதியவரின் உடலை சாலையில் வைத்து அப்பகுதி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை அடுத்து அப்பகுதியின் டிஎஸ்பி தலைமையில் போலீசார் பொதுமக்களுக்கு பேச்சுவார்த்தை நடத்தி விரைந்து குற்றவாளிகளை கைது செய்து விடுவோம் என உறுதி அளித்ததை ஏற்று முதியவரின் உடல் அங்குள்ள மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் மாணவர்களுக்கு இடையில் சாதிய ரீதியிலான மோதல் இருந்ததும், பாதிக்கப்பட்ட மாணவருக்கும், மாற்று சமூகத்தை சேர்ந்த மாணவர்களுக்கும் இடையே முன் விரோதம் இருந்தது தெரியவந்துள்ளது. இச்சம்பவத்தில் ஈடுபட்ட 17 வயதுடைய 12ம் வகுப்பு மாணவர்கள் நான்கு பேர் மற்றும் இரண்டு சிறார் உட்பட ஆறு பேர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டம் கொலை முயற்சி உள்ளிட்ட ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட அவர்கள் சிறார் கூர்நோக்கு இல்லத்தில் அடைக்கப்பட்டுள்ளனர்.

நாங்குநேரி

இது குறித்து இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ், ”பாதிக்கப்பட்ட மாணவர் விரைவில் குணமடைய வாழ்த்துவதாகவும், சாதிதான் சமூகம் என்றால் வீசும் காற்றில் விசம் பரவட்டும்” என்று தனது ஆதங்கத்தை தெரிவித்துள்ளார்.

இயக்குநர் மாரி செல்வராஜ் இது குறித்து கூறுகையில், “கடந்த இரண்டு நாட்களாக இந்த படிகட்டுகளில் சொட்டிக்கொண்டிருக்கும் சூடான இரத்தத்தின் கதையை யாரிடமாவது சீக்கிரம் கேட்டு தெரிந்துகொள்ளுங்கள் . காய்ந்து போனால் அதை பழைய புண்ணாக்கி எளிதாக எல்லாரையும் கடந்து போகசொல்லி உங்கள் இதயம் உங்களுக்கே தெரியாமல் எல்லாரிடமும் மன்றாட ஆரம்பித்துவிடும்” என தெரிவித்துள்ளார்.

17 வயது என்பது சிறுவர்களுக்கு தங்களது கனவு வாழ்க்கை அரும்பும் காலம். தங்களது எதிர்காலம் என்ன என்பதையும் பள்ளியின் இறுதி கட்டத்திலேயே மாணவர்கள் நிர்ணயிப்பார்கள். பாதிக்கப்பட்ட மாணவருக்கும், இக்கொடும் செயலில் ஈடுபட்ட மாணவர்களுக்கும் நிச்சயம் கனவுகளும், தங்களது எதிர்காலம் குறித்த லட்சியங்களும் இருந்திருக்கும். ஆனால் அவைகள் அனைத்தையும் மறந்து சாதியின் பெருமை முன் வந்து இச்செயலை மாணவர்கள் செய்யத் துணிகிறார்கள், செய்துள்ளார்கள். இனியாவது, இதுபோன்ற செயல்கள் நடக்காமல் இருக்க அனைத்து தரப்பிலும் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்பதே தேவையாக உள்ளது.