செய்தியாளர்: பே.சுடலைமணி செல்வன்
இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளிவந்து விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்ற திரைப்படம் வாழை. இந்த படம் தனது வாழ்க்கையில் நடந்த சம்பவத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படம் என்று அவரே கூறியிருந்தார். வாழைத்தார் ஏற்றிச் செல்லும் லாரி கவிழ்ந்து அதன் மேல் பயணம் செய்த 19 பேர் உயிரிழந்த சம்பவத்தை வைத்து உருவானதுதான் வாழை திரைப்படம்.
இந்த விபத்தில் மாரி செல்வராஜின் சொந்த ஊரான புளியங்குளத்தைச் சேர்ந்த 15 பேர், அருகே உள்ள நாட்டார்குளத்தைச் சேர்ந்த 4 பேர் என மொத்தம் 19 பேர் உயிரிழந்தனர். இதில் ஏராளமானோர் படுகாயம் அடைந்தனர். அதில், நாட்டார்குளத்தைச் சேர்ந்த பனிமாதா என்ற பெண்ணும் விபத்து நடந்த லாரியில் பயணம் செய்தார். அவருக்கு இரண்டு கால்களும் துண்டானது. இந்த நிலையில் இதுகுறித்து புதிய தலைமுறை தொலைக்காட்சியில் செய்தி வெளியானது.
இதையடுத்து இந்த விபத்தில் பாதிக்கப்பட்ட பனிமாதாவை போனில் தொடர்பு கொண்டு பேசிய இயக்குநர் மாரி செல்வராஜ், வேண்டிய உதவிகளை செய்து தருவதாக வாக்குறுதி அளித்தார். அதே போல் பனிமாதாவை படக்குழுவினர் இருசக்கர வாகன ஷோரூமிற்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவருக்கு வேண்டிய இருசக்கர வாகனத்தை தேர்வு செய்து வழங்கினார்கள். இதனால் மகிழ்ச்சியடைந்த பனிமாதா புதிய தலைமுறைக்கும், இயக்குநர் மாரி செல்வராஜ்-க்கு நன்றி தெரிவித்தார்.