தமிழ்நாடு

30 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் பரவும் தொண்டை அடைப்பான் நோய்

30 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் பரவும் தொண்டை அடைப்பான் நோய்

webteam

30 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தமிழகத்தில் தொண்டை அடைப்பான் நோய் வேகமாக பரவி வருகிறது.

30 வருடங்களுக்கு முன்பு தமிழகத்தை அச்சுறுத்திய உயிர்க்கொல்லி நோயான தொண்டை அடைப்பான் தற்போது மீண்டும் மெல்ல மெல்ல பரவி வருகிறது. அப்போது மேற்கொள்ளப்பட்ட மருத்துவ நடவடிக்கைகள் காரணமாக தொண்டை அடைப்பான் நோய், முற்றிலும் களையப்பட்டது. இந்நிலையில் முறையாக தடுப்பூசி போடாததால் தற்போது சில குழந்தைகள் இந்நோய்த் தாக்கத்தால் பாதிக்கப்பட்டு்ள்ளதாகக் கூறுகிறார் எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனை இயக்குநர் ஜெயச்சந்திரன். 

தொண்டை அடைப்பான் நோய் காரின்பாக்டீரியம் டிப்தீரியா எனும் பாக்டீரியாவால் ஏற்படுகிறது. இந்நோயால் பாதிக்கப்படும் குழந்தைகளுக்கு தொண்டையில் சவ்வு போன்று உருவாகி உணவு உட்கொள்ளவும், மூச்சு விடவும் முடியாத நிலையும் ஏற்படும். ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கே இந்த நோய் அதிகமாக பரவுகிறது. தொண்டை அடைப்பான் நோய் பாதிப்பால் இந்த ஆண்டு சென்னை அசோக்நகரை சேர்ந்த 12 வயது சிறுமி உட்பட இதுவரை 7 குழந்தைகள் எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். முறையாக தடுப்பூசி போடுவதன் மூலம் இந்த நோய் வராமல் தடுக்க முடியும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

தொண்டை அடைப்பான் நோய்க்கான தடுப்பூசி தமிழக அரசால் இலவசமாக வழங்கப்படுகிறது. தாய்மார்கள் தங்கள் குழந்தைகளுக்கு 6 வாரம், 10 வாரம், 14 வாரம் மற்றும் ஒன்றரை வயதில் முறையாக தடுப்பூசி போடுவதன் மூலம் தொண்டை அடைப்பான் நோயை தடுக்க முடியும் என்று எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனை இயக்குநர் தெரிவித்துள்ளார்