தமிழ்நாடு

'அ' கற்றுத்தந்த ஆசிரியர்களை தேடிப்பிடித்து கௌரவித்த முன்னாள் மாணவர்கள் - 30 ஆண்டுகளுக்கு பிறகு நெகிழ்ச்சி

'அ' கற்றுத்தந்த ஆசிரியர்களை தேடிப்பிடித்து கௌரவித்த முன்னாள் மாணவர்கள் - 30 ஆண்டுகளுக்கு பிறகு நெகிழ்ச்சி

webteam

வத்தலக்குண்டு அருகே 'அ' கற்றுத்தந்த ஆரம்பப் பள்ளி ஆசிரியர்களை அழைத்து முன்னாள் மாணவர்கள் கௌரவப்படுத்திய நெகிழ்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகே உள்ள பட்டிவீரன்பட்டி ந.சு.வி.வி தொடக்கப்பள்ளியில் 1987-ம் ஆண்டு முதல் 1992-ம் ஆண்டு வரை படித்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி, 30 வருடங்களுக்கு பிறகு அதே பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்கள் 50-க்கும் மேற்பட்டோர் சென்னை, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், வத்தலக்குண்டு, கொடைக்கானல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும் வந்திருந்தனர்.

அனைவரும் ஒன்று சேர்ந்து மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்ளும் நாளில் தங்களுக்கு முதன் முதலில் 'அ' கற்றுத்தந்த ஆரம்பப் பள்ளி ஆசிரியர்கள் அனைவரையும் வரவழைத்து அவர்களையும் கௌரவப்படுத்த வேண்டும் என்று முடிவெடுத்துள்ளனர். அதன்படி ஆசிரியர்களை தேடிப்பிடித்து முன்னாள் மாணவர்கள் அழைத்து வந்தனர். முன்னாள் மாணவர்களின் அழைப்பினை ஏற்று அப்போது பணிபுரிந்த 15 ஆசிரியர்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

ஆசிரியர்கள் அனைவரையும் விழா மேடையில் அமரவைத்து அவர்களுக்கு பொன்னாடை போர்த்தியும், மாலை அணிவித்தும் பரிசுப்பொருட்கள் வழங்கியும் முன்னாள் மாணவர்கள் கௌரவப்படுத்தினர். இப்பள்ளியில் படித்து லண்டனில் பணிபுரிந்து வரும் சதீஷ் பாண்டியன் என்ற முன்னாள் மாணவர் காணொலி காட்சி மூலம் ஆசிரியர்களுடன் உரையாடித் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். ஆரம்பப்பள்ளி ஆசிரியர்களான தங்களை நினைவில் வைத்து கௌரவப்படுத்தியது பெரும் மகிழ்ச்சி அளித்ததாக முன்னாள் ஆசிரியர்கள் கூறினர்.