தமிழ்நாடு

மன்மோகன் சிங்கா? முலாயம் சிங்கா? : அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேச்சால் சலசலப்பு

மன்மோகன் சிங்கா? முலாயம் சிங்கா? : அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேச்சால் சலசலப்பு

kaleelrahman

திண்டுக்கல்லில் மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் 104வது பிறந்த நாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட தமிழக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசும்போது:-

“திமுக தலைவர் ஸ்டாலின் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வை ரத்து செய்வோம் என கூறி வருகிறார். ஆனால் காங்கிரஸ் ஆட்சியின் போது தான் நீட் தேர்வு கொண்டு வரப்பட்டது. அப்போது காங்கிரஸ் கூட்டணியில் திமுக இருந்தது. இதனை முன்னாள் பிரதமர் முலாயம்சிங் என உலறிய சீனிவாசன் மீண்டும் சுதாரித்துக் கொண்டு மன்மோகன் சிங் ஆட்சியின் போதுதான் கொண்டு வரப்பட்டது என பேசினார். அப்போது மன்மோகன் சிங் பிரதமராக இருக்கும்போது காங்கிரஸ் எம்பிக்கள் அமைச்சராக இருக்கும்போது நீட் தேர்வு கொண்டு வரப்பட்டது. இது நூற்றுக்கு நூறு சத்தியம் உண்மை. அந்த ஆட்சியில் கொண்டு வந்தததை நான் முதல்வரானால் நீட் தேர்வை ரத்து செய்வேன் என்று ஸ்டாலின் கூறுகிறார்.

நீட் தேர்வை ரத்து செய்வதற்கு பிரதமராக இருக்கக்கூடிய மோடியால் மட்டுமே முடியும். அவருக்கு இன்னும் 4 ஆண்டுகள் உள்ளது. அவர் நினைத்தால் தான் நீட் தேர்வை ரத்து செய்ய முடியும். ஏற்கெனவே போடப்பட்ட திட்டங்கள். காங்கிரஸ் எல்லாம் கையெழுத்து போட்டுவிட்டு இப்ப மாற்றுவேன் என்று சொன்னால் எப்படி மாற்றுவார்கள். இது நடக்கிற காரியமா இது ஒரு பெரிய பொய். திமுக காரர்களை பார்த்து நான் கேட்கிறேன். எங்களை பார்த்து ஊழல் என்று சொல்லுகிற நீங்கள் அத்தனை பெரும் உத்தமர்களா இயேசுவா புத்தர்களா என்ன நீங்க வேஷம் போடுகிறீர்கள்.

ஊழலில் ஒரு ஆட்சி கலைந்தது என்று சொன்னால் அது திமுக தான். கருணாநிதி ஒரு தீய சக்தி அழிக்கப்பட வேண்டிய கட்சி திமுக என்று எம்ஜிஆர் தெளிவாகக் கூறியுள்ளார். முன்னாள் அமைச்சர்கள் அனைவர் மீதும் ஊழல் குற்றச்சாட்டு சொத்துக்கள் சேர்த்து விட்டதாக 13 முன்னாள் அமைச்சர்கள் மீது வழக்கு நடைபெற்று வருகிறது. நம்முடைய மகாத்மா காந்தி இந்த ஊரில் இருக்ககூடிய பெருந்தலைவர் ஐ.பெரியசாமி அவருடைய மகன் செந்தில்குமார் அத்தனை பேர் மீதும் சொத்து வழக்கு நடைபெற்று வருகிறது. ஊருக்குள் உத்தமர் போல் மேடையில் பேசுகிறார்கள்.

கொரோனா காலத்தில் திமுக காரர்கள் நலத்திட்டம் செய்யப் போகிறோம் எனக்கூறி வணிகர்களிடம் நிதி கேட்டுள்ளனர். பகிரங்க சவால் விடுகிறேன் எங்களுடைய 5 வருட ஆட்சியில் ஏதாவது ஒரு கடையில் வந்து எங்களுக்கு பணம் கொடுங்கள் காசு கொடுங்கள் என்று கேட்டதுண்டா. எந்த நிறுவனத்தையாவது நான் உட்பட நாங்கள் யாராவது நிதி கேட்டோம் என்று நிரூபித்தால் அதிமுகவில் இல்லை அமைச்சர் பதவியிலிருந்து ராஜினாமா செய்ய தயாராக இருக்கிறேன்” என்று பேசினார்.

இந்தக் கூட்டத்தில் முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் என்று சொல்வதற்கு பதிலாக முலாயம்சிங் என அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசியதால் சலசலப்பு ஏற்பட்டது.