தமிழ்நாடு

திண்டுக்கல்லில் அனல் பறந்த கிடா சண்டை

webteam

அழிந்து வரும் கிடா சண்டையை பாதுகாக்கும் வகையில் திண்டுக்கல்லில் கிடாசண்டை திருவிழா நடைபெற்றது.

தமிழர்களின் வீரவிளையாட்டான ஜல்லிகட்டிற்கு அடுத்து மக்கள் விரும்பி பார்க்க கூடியது கிடா சண்டை. தற்போது தமிழகத்தில் கிடா சண்டை என்பது அழிந்து விட்டது. அதேபோல் நாட்டு கிடாக்களும் அழிந்து வருகின்றன. இதனை பாதுகாக்கும் வகையிலும், இளைஞர்கள் மத்தியில் வீரவிளையாட்டான கிடா சண்டை முக்கியத்துவத்தினை உணர்த்தும் வகையில் திண்டுக்கல்லில் கிடா சண்டை இன்று ஒரு நாள் நடைபெற்று வருகிறது. இதில் திண்டுக்கல், மதுரை, தேனி, திருச்சி, கோவை உட்பட மாநில முழுவதிலும் இருந்து 150 க்கும் மேற்பட்ட கிடாக்கள் பங்கேற்றன. 

நாட்டுக் கிடாக்களின் வயது 1 முதல் 10 வயதாகும். சண்டையில் பங்கேற்கும் நாட்டுக் கிடாக்கள் 2 பல்லு, 4 பல்லு, 6 பல்லு, கிடாபல், இளம் கிடாபல் என 5 வகைகளாக பிரிக்கப்பட்டு போட்டிகள் நடைபெற்றது. சம வயதுள்ள கிடாக்கள் 60 முறை போட்டி களத்தில் முட்டி கொள்ள வேண்டும். இதில் எந்தக் கிடா அதிக முறை முட்டி தள்ளுகிறதோ அந்தக் கிடா வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும். இரண்டு கிடாக்களும் சம அளவில் முட்டி கொண்டால் இரண்டும் வெற்றிப் பெற்றதாக அறிவிக்கப்படும். போட்டியில் வென்ற கிடாக்களின் உரிமையாளர்களுகு பித்தளை அண்டா மற்றும் ரொக்கப் பரிசு வழங்கப்பட்டது. இப்போடியை காண திண்டுக்கல், பழனி, மதுரை, அலங்காநல்லூர், தேனி உள்ளிட்ட பகுதிகளிலும் இருந்து ஆயிரக்கணக்கானோர் வருகை தந்தனர். கிடா சண்டையை முன்னிட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்து.