தமிழ்நாடு

பள்ளியிலிருந்து குழந்தைகளுடன் வந்த மனைவி - வீட்டில் காத்திருந்த அதிர்ச்சி

webteam

வத்தலக்குண்டில் பட்டப்பகலில் ஆளில்லாத வீட்டில் புகுந்து திருடிய நபரை, பெண் கூச்சலிட்டதால் பொதுமக்கள் பிடித்தனர்.

திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு வெங்கட்டாபட்டி தெருவை சேர்ந்த மின்வாரிய ஊழியர் காசிராஜன். இவரது மனைவி சிவகாமி. இந்த தம்பதியின் குழந்தைகள் பள்ளியில் படித்து வருகின்றனர். காசிராஜன் பகலில் வேலைக்கு சென்றுவிடுவதால், பள்ளி முடிந்ததும் சிவகாமி தான் குழந்தைகளை பள்ளிக்கு சென்று அழைத்து வருவார். அந்த வகையில் நேற்று வழக்கம்போல், வீட்டை பூட்டி விட்டு பள்ளிக்கு சென்று தனது குழந்தைகளை அழைத்து வந்துள்ளார்.

அவர் திரும்பி வந்து பார்த்தபோது வீடு திறந்த நிலையில், இருந்துள்ளது. சிவகாமி மெல்ல வீட்டிற்குள் எட்டிப்பார்த்துள்ளார். உள்ளே ஒரு மர்ம நபர் வீட்டில் இருக்கும் நகைகள் மற்றும் பொருட்களை மூட்டை கட்டிக்கொண்டு இருந்துள்ளார். இதைக்கண்டதும் அதிர்ச்சியடைந்த சிவகாமி, சத்தம் போட்டு “திருடன் திருடன்” என அலறியுள்ளார். உடனே அந்த திருடன் அங்கிருந்து தப்பி ஓட முயன்றுள்ளார். அதற்குள் அங்கு ஓடிவந்த அக்கம்பக்கத்தினர், திருடனை மடக்கிப் பிடித்தனர். 

திருடன் நழுவி ஓட முயற்சித்ததால் அங்கிருந்த மின்கம்பத்தில் கட்டி வைத்து, தர்மஅடி கொடுத்தனர். திருடனின் இருசக்கர
வாகனத்தை பரிசோதித்த மக்கள், அதிலிருந்த கத்தி ஒன்றையும் கைப்பற்றினர். பின்னர் இதுதொடர்பாக காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், திருடனை கைது செய்தனர். அத்துடன் காசிராஜன் வீட்டில் திருடன் திருடிய 5 சவரன் நகையையும் மீட்டனர். மேலும் திருடனை கைது செய்து காவல்நிலையம் அழைத்துச்சென்றனர். பட்டப்பகலில் நடைபெற்ற இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.