சாலை மறியல் pt desk
தமிழ்நாடு

திண்டுக்கல்: மயானத்திற்குச் செல்லும் பொதுப்பாதையை அடைத்ததாகக் கூறி சாலை மறியல்

தருமத்துப்பட்டியில், மயானத்திற்குச் செல்லும் பொதுப்பாதையை தனிநபர் ஒருவர் அடைத்ததாகக் கூறி, நூற்றுக்கும் மேற்பட்ட குறிப்பிட்ட சமூக மக்கள் சாலைமறியல் போராட்டம் நடத்தினர்.

PT WEB

செய்தியாளர்: காளிராஜ்.த

திண்டுக்கல் மாவட்டத்தில், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமியின் தொகுதியான ஆத்தூரில் அமைந்துள்ளது ரெட்டியார்சத்திரம் ஊராட்சி ஒன்றியம். இவ்வொன்றியத்திற்கு உட்பட்ட தருமத்துப்பட்டியில் உள்ள காலனியில் குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்த சுமார் 2,000 குடும்பங்கள் வசித்து வருகின்றன.

சாலை மறியல்

அம்மக்கள், தங்களின் மயானத்திற்கு செல்லும் பொதுப்பாதையை தனிநபர் ஒருவர் ஆக்கிரமித்துள்ளதாக, வட்டாட்சியர், ஆட்சியர் உள்ளிட்ட பல்வேறு அதிகாரிகளிடம் புகார்கள் அளிக்கப்பட்டும் நடவடிக்கை இல்லை என குறிப்பிட்டு வந்தனர். இந்நிலையில் இன்று இப்பகுதியைச் சேர்ந்த பழனியம்மாள் என்ற பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

அவரது உடலை அடக்கம் செய்வதற்கு மயானத்துக்கு கொண்டு சென்றபோது, பொதுப் பாதையை ஆக்கிரமிப்பு செய்ததாகக் கூறப்படும் நபர், வழிவிடவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அம்மக்கள், உடலை அங்கேயே வைத்துவிட்டு, மதுரை-பழனி தேசிய நெடுஞ்சாலையில் மறியல் போராட்டம் நடத்தினர். இதனால் சாலையின் இருபுறங்களிலும் நூற்றுக்கணக்கில் வாகனங்கள் தேங்கி நின்றன.

சாலை மறியல்

தகவலறிந்து வந்த செம்பட்டி மற்றும் கன்னிவாடி காவலர்கள், போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி மறியலை கைவிடச் செய்தனர்.