பசிக்கொடுமையும், பாசம் அற்ற தனிமையும் வாட்ட, கொரோனா காலத்தில் பிள்ளைகளால் கைவிடப்பட்டு உணவின்றி தவிப்பதாக காவல்நிலையத்தில் வயதான பெற்றோர் புகார் அளித்த சோகச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.
திண்டுக்கல்லைச் சேர்ந்தவர் 79 வயது பொன்னையா. இவரது மனைவி பாண்டியம்மாளுக்கு 69 வயது. வாட்ச்மேனாக வேலைபார்த்துவரும் பொன்னையாவுக்கு இடது கை செயலிழந்துள்ளது. 3 ஆண் பிள்ளைகள், 3 பெண் குழந்தைகள் கொண்ட இந்த தம்பதிக்கு 12 பேரக்குழந்தைகள் உள்ளனர். மகன்கள், மகள்கள் திருமணமாகி தனியாக வசித்துவரும் நிலையில், பொன்னையா தம்பதி வாடகை வீட்டில் வசித்து வருகின்றனர். வயது மூப்பால் உடல்நிலை பாதித்த நிலையில் பொன்னையா வாட்ச்மேன் வேலைக்கு சென்றிருக்கிறார். ஆனால் கொரோனா சூழலால் 6 மாதகாலமாக வேலை இழந்து நிற்கிறார் இந்த 79 வயது முதியவர். 6 மாதங்களாக பசியும், வறுமையுமாக தவித்த இத்தம்பதியை பெற்ற 6 பிள்ளைகளும் கவனிக்கவில்லை.
பெற்ற பிள்ளைகள் ஒருவேளை சாப்பாடு போட காவல்துறையினர் நடவடிக்கை எடுக்கவேண்டும் எனக்கோரி இந்த முதிய தம்பதி புகார் அளித்தநிலையில் பிள்ளைகளிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.