செய்தியாளர்: காளிராஜன்.த
திண்டுக்கல் மாவட்டம், கன்னிவாடி அருகே உள்ள ஆலந்தூரன்பட்டியைச் சேர்ந்தவர் முத்துச்சாமி. இவரது மனைவி பொன்னம்மாள். இவர்களின் மகள் காளீஸ்வரி. இக்குடும்பத்தினருக்கு 1.25 சென்ட் இடம் உள்ளது. அந்த இடத்தை முத்துச்சாமியின் உறவினர்கள் அபகரிக்க முயல்வதாகக் கூறி கடந்த மாதம் கன்னிவாடி போலீஸ் ஸ்டேஷனில் அவர் புகார் அளித்ததாக தெரிகிறது. மேலும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.
இதனால் ‘எங்களது இடத்தை அளப்பதற்கு பணம் கட்டியும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை’ எனக்கூறி, முத்துசாமி, தனது குடும்பத்துடன் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மண்ணெண்ணெய் ஊற்றி இன்று தீக்குளிக்க முயன்றார். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி தண்ணீர் ஊற்றி காப்பாற்றினர். இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து முத்துசாமி கூறியபோது... "ஆலந்தூரான்பட்டியில் எனக்கு சொந்தமான இடம் உள்ளது. அந்த இடத்தை எனது எதிர் வீட்டில் உள்ள உறவினர்கள் அபகரிக்க முயல்கின்றனர். இது குறித்து நான் பலமுறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை, ஆதலால் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக் கூறி நான் குடும்பத்துடன் இப்படி செய்தேன்" என தெரிவித்தார். இதனையடுத்து தாடிக்கொம்பு போலீசார் விசாரணைக்காக அவர்களை காவல் நிலையம் அழைத்துச் சென்றனர்.
தற்கொலை எதற்கும் தீர்வல்ல. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் வந்தாலோ, அதில் இருந்து விடுபடுவதற்கு தமிழக சுகாதார சேவை உதவி மையம் - 104, சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044-24640050 ஆகிய எண்களை அழைக்கலாம்.