வழக்கறிஞர்கள் உண்ணாவிரதம் pt desk
தமிழ்நாடு

திண்டுக்கல்: புதிய சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி வழக்கறிஞர்கள் உண்ணாவிரதம்

webteam

செய்தியாளர்: காளிராஜன்.த

மத்திய அரசு இந்திய தண்டனைச் சட்டம், இந்திய குற்றவியல் நடைமுறை சட்டம், இந்திய சாட்சிய சட்டம் ஆகியவற்றில் மாற்றங்கள் செய்து புதிதாக பாரதிய நியாய சன்ஹிதா, பாரதிய நாகரிக் சுரக்க்ஷா சன்ஹிதா, பாரதிய சாக்ஷயா அதிநயம் என்ற பெயரில் புதிய சட்டங்கள் கொண்டு வந்துள்ளது. இந்த புதிய சட்டங்கள் நாடு முழுவதும் இன்று (ஜூலை 1) முதல் அமலுக்கு வந்துள்ளன.

new laws

மத்திய அரசின் இந்த புதிய குற்றவியல் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி திண்டுக்கல்லில் இன்று வழக்கறிஞர்கள் கருப்பு நாளாக அனுசரித்து வருகின்றனர். மேலும், திண்டுக்கல் ஒருங்கிணைந்த மாவட்ட நீதிமன்ற வளாகம் முன்பு 100க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு செய்து ஒருநாள் அடையாள உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் நீதிமன்ற பணிகள் பாதிக்கப்பட்டது.

இதேபோல் ஒட்டன்சத்திரம், பழனி, வேடசந்தூர், கொடைக்கானல், நிலக்கோட்டை, நத்தம், ஆகிய ஊர்களிலும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் குமரேசன் கூறுகையில்... மத்திய அரசை கண்டித்து இன்று அடையாள உண்ணாவிரதப் போராட்டமும், நாளை கண்டன ஆர்ப்பாட்டமும் நாளை மறுநாள் மத்திய அரசு அலுவலகங்களை முற்றுகையிட்டு போராட்டமும் நடத்த உள்ளளோம். வருகிற 8-ஆம் தேதி திருச்சியில் மாபெரும் பேரணி நடைபெறும் என்றும் தெரிவித்தார்.