தமிழ்நாடு

தமிழக கேரள எல்லையில் திடீரென ஆய்வு மேற்கொண்ட திண்டுக்கல் சரக டிஐஜி

தமிழக கேரள எல்லையில் திடீரென ஆய்வு மேற்கொண்ட திண்டுக்கல் சரக டிஐஜி

kaleelrahman

தமிழக கேரள எல்லைப் பகுதியான குமுளியில் திண்டுக்கல் சரக டிஐஜி முத்துச்சாமி திடீர் ஆய்வு மேற்கொண்டார். தமிழக கேரள போலீசாருக்குள் நல்லுறவை ஏற்படுத்த எல்லையோர கேரள போலீசாருக்கு (ஃபேஸ் ஷீல்டு) முகக் கவசங்களை வழங்கினார்.

கொரோனா இரண்டாம் அலை அதிகரிப்பு காரணமாக தமிழகத்தில் கடந்த 10ஆம் தேதி முதல் முழு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. ஊரடங்கில் அனுமதியின்றி வெளியே வாகனங்களில் சுற்றித் திரிபவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. மாவட்டங்களுக்கு உள்ளேயும், வெளி மாவட்டங்களுக்கும், வெளி மாநிலங்களுக்கும் செல்லும் வாகனங்கள் முறையாக இ.பதிவு செய்யப்பட்டுள்ளதா என்பதை போலீசார் ஆங்காங்கே சோதனை சாவடி அமைத்து சோதனை செய்து வருகின்றனர். இ.பதிவு செய்யாமல் வரும் வாகனங்களுக்கு அபராதம் விதிப்பதோடு திருப்பி அனுப்பப்படுகின்றனர்.

இந்நிலையில் தமிழக கேரள எல்லைப் பகுதியான குமுளியில் தமிழக போலீசார் சோதனை சாவடியில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து திண்டுக்கல் சரக டிஐஜி முத்துச்சாமி ஆய்வு செய்தார். எல்லைப் பகுதியில் போலீசாரின் சோதனைகள் குறித்தும், கடந்த 2 மாதங்களுக்கு முன்பு எல்லையில் கட்டப்பட்ட போலீஸ் சோதனைச்சாவடியில் போலீசாருக்கு போதுமான வசதிகள் உள்ளதா என்பதையும் ஆய்வு செய்து, அங்கு பணியில் ஈடுபட்டிருந்த தமிழக போலீசாருக்கு  ஃபேஸ் ஷீல்டு கவசம் வழங்கினார்.

பின்பு எல்லைப்பகுதியில் இருந்த கேரள போலீசாருக்கும் ஃபேஸ் ஷீல்டு வழங்கினார். கேரள போலீசாரும் அதை பெற்றுக் கொண்டனர். நிகழ்ச்சியில் தேனி எஸ்பி சாய்சரண் தேஜஸ்வி, உத்தமபாளையம் டிஎஸ்பி சின்னக்கண்ணு தனிப்பிரிவு எஸ்.ஐ மணிகண்டன் உட்பட போலீஸ் அதிகாரிகள் உடன் இருந்தனர்.