தமிழ்நாடு

திண்டுக்கல்: திடீரென நிறுத்தப்பட்ட கொசவபட்டி ஜல்லிக்கட்டு.. காரணம் இதுதான்!

திண்டுக்கல்: திடீரென நிறுத்தப்பட்ட கொசவபட்டி ஜல்லிக்கட்டு.. காரணம் இதுதான்!

webteam

திண்டுக்கல் அருகே கொசவபட்டியில் நடத்தப்பட்ட ஜல்லிக்கட்டு போட்டியில் பதிவு செய்யப்படாத காளைகளையும் பங்கேற்க மொத்தமாக கொண்டு வந்ததால் பாதுகாப்பு கருதி மாவட்ட எஸ்பி ஜல்லிக்கட்டு போட்டிகளை நிறுத்தினார்.

திண்டுக்கல் மாவட்டம் கொசவபட்டி புனித உத்திரிய மாதா கோவில் திருவிழாவையொட்டி வருடந்தோறும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் மின் அலங்கார தேர்பவனி நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து இன்று நடைபெறவிருந்த ஜல்லிக்கட்டு போட்டியை கோட்டாட்சியர் பிரேம்குமார் கொடியசைத்து தொடங்கி வைத்தார். கால்நடை மருத்துவர்கள் இதில் பங்கேற்ற காளைகளையும், மாடுபிடி வீரர்களையும் சோதனை செய்ததற்கு பின் அனுமதி வழங்கினர். இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் 350 காளைகளும், 400 மாடுபிடி வீரர்களும் கலந்து கொள்ள இருந்தார்கள். 250க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். விளையாட்டில் சிறந்த வீரர்களுக்கும், காளைகளுக்கும், செல்போன், தங்கம், வெள்ளி நாணயம், டிவி, கட்டில், பீரோ, சைக்கிள், அண்டா உட்பட பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டன.

இதனையடுத்து ஜல்லிக்கட்டு போட்டியில் பதிவு பெற்ற 460 காளைகள் போட்டியில் பங்கேற்கப்பட்டது. ஆனால் நீதிமன்ற உத்தரவை மீறி பதவு செய்யப்படாத சில காளைகளை மொத்தமாக வாடி வாசலுக்கு கொண்டு வந்ததால், திண்டுக்கல் மாவட்ட எஸ்பி பாஸ்கரன், பொதுமக்களின் பாதுகாப்பு கருதி ஜல்லிக்கட்டு போட்டியை நிறுத்தினார்.

இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் மொத்தம் 21 பேர் காயமடைந்துள்ளனர். அதில் மாடுபிடி வீரர்கள் 5 பேர், மாட்டின் உரிமையாளர்கள் 5 பேர், பார்வையாளர்கள் 11 பேர் என மொத்தமாக காயமடைந்துள்ளனர். இந்த 21 பேரில் பலத்த காயமடைந்த பத்து பேர் திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.