தோண்டும் பணியில் ஈடுபட்ட இரண்டாவது ரிக் இயந்திரமும் பழுதாகியுள்ளது. மாற்று பாகங்கள் தயார் நிலையில் இருப்பதால் விரைவில் தோண்டும் பணி தொடங்கும் என தெரிகிறது.
ஆழ்துளை கிணற்றில் சிக்கியுள்ள குழந்தையை மீட்கும் பணி, 66 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்று வருகிறது. பலகட்ட முயற்சிகள் தோல்வியடைந்த நிலையில், ரிக் இயந்திரம் மூலம் குழி தோண்டும் பணி தொடங்கி நடைபெற்றது.
குழி தோண்டும்போது பாறைகள் இருந்ததால் அப்பணியில் சிறிது தொய்வும் ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து அதிகத் திறன் கொண்ட இரண்டாவது ரிக் இயந்திரம் ராமநாதபுரத்திலிருந்து கொண்டு வரப்பட்டது. இதுவரை 45 அடிக்கு பள்ளம் தோண்டப்பட்டுள்ளது.
மீட்புப்பணி நடைபெறும் இடத்தில் அவ்வப்போது மழையும் பெய்து வருகிறது. இந்நிலையில் குழி தோண்டும் பணியில் ஈடுபட்ட இரண்டாவது ரிக் இயந்திரமும் பழுதாகியுள்ளது.
இயந்திரத்தில் உள்ள போல்டுகள் சேதமடைந்து இருப்பதால் தோண்டும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. ஆனால் மாற்று பாகங்கள் தயார் நிலையில் இருப்பதால் விரைவில் தோண்டும் பணி தொடங்கும் எனத் தெரிகிறது.