தமிழ்நாடு

என் வீட்டில் ரெய்டா? சிறைத்துறை துணைத்தலைவர் மறுப்பு

என் வீட்டில் ரெய்டா? சிறைத்துறை துணைத்தலைவர் மறுப்பு

webteam

தன் வீட்டில் ரெய்டு ஏதும் நடத்தப்படவில்லை என்று சிறைத்துறை டிஐஜி முருகேசன் மறுப்புத் தெரிவித்துள்ளார்.

புழல் சிறையில் கைதிகள் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருப்பதாக புகைப்படங்கள் வெளியானதை தொடர்ந்து, அங்கு அவ்வப்போது சோதனைகள் நடைபெற்று வருகிறது. இதன் தொடர்ச்சியாக, சிறைத்துறை துணைத்தலைவர் முருகேசன் வீட்டில் ரெய்டு நடத்தப் பட்டதாகவும் அங்கிருந்து 4 செல்போன்கள், சிம்கார்டுகள், பேட்டரிகள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் செய்திகள் வெளியாயின. 

இந்நிலையில் இந்தச் செய்தியை மறுத்துள்ள சிறைத்துறை துணைத்தலைவர் முருகேசன், ’எனது வீட்டில் விஜிலென்ஸ் ரெய்டு, வருமானவரி ரெய்டு என எதுவும் நடக்கவில்லை. அந்த தகவல் தவறானது. சிறைத்துறையில் ஏராளமான நற்பணிகளைச் செய்தவன் நான். இந்தியா சுதந்திரம் அடைந்த பின் யாரும் செய்யாத பணியை செய்திருக்கிறேன். 50-60 தண்டனை சிறைவாசிகளை சுமார் 110 கிமீ தூரம் வரை வெளியில் எடுத்துச் சென்று அரசு மருத்துவமனை, பள்ளிகள் உள்ளிட்ட 30 பொது இடங்களை சுத்தம் செய்து இருக்கிறேன். இப்பணி போன்று இந்தியாவில் வேறு எங்கும் செய்து உள்ளார்களா? ஏராளமான விவசாய பொருட்களை உற்பத்தி செய்து இருக்கிறேன். அப்படிப்பட்ட எனக்கு எதிராக தவறான பிரசாரம் மேற்கொள்கிறார்கள்’ என்று தெரிவித்துள்ளார்.