Jayakumar pt desk
தமிழ்நாடு

நெல்லை காங்கிரஸ் நிர்வாகி மரணம் - “அறிக்கை வந்த பிறகே கொலையா, தற்கொலையா என்பது தெரியவரும்” - டிஐஜி

“இன்னும் இரண்டு நாட்களில் காவல்துறையே முழுமையான விசாரணையை முடித்துவிட்டு, பத்திரிகை செய்தி தருகிறோம்” - திருநெல்வேலி மாவட்ட கண்காணிப்பாளர் சிலம்பரசன்

PT WEB

நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் மர்மமான முறையில் நேற்று உயிரிழந்திருந்தார். தொடர்ந்து அவரது உடல் நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உடற்கூராய்வு செய்யப்பட்டது.

Jayakumar

பின் அவரது உடல் அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, தமிழ்நாடு சட்டமன்ற குழு காங்கிரஸ் தலைவர் ராஜேஷ் குமார், கன்னியாகுமாரி எம்பி விஜய் வசந்த் மற்றும் காங்கிரஸ் கட்சியின் மூத்த நிர்வாகிகள் ஜெயக்குமார் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை பேசுகையில்...

“நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவரின் மரணம் வருத்தம் அளிக்கிறது. விசாரணை முறையாக நடந்து வருகிறது. இக்குற்றச் சம்பவத்தில் தொடர்புடையவர்கள் யாராக இருந்தாலும் கைது செய்யப்பட வேண்டும். எந்த அரசியல் பின்புலத்தோடு அவர்கள் இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் உறுதி அளித்துள்ளார்.

Selvaperunthagai

உண்மையான குற்றவாளிகளை நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும் என்பதுதான் எங்கள் வேண்டுகோள். இந்த விவகாரத்தில் கட்சி ரீதியாக விசாரணை நடத்தி அதன் அறிக்கையை தலைமையிடம் கொடுப்போம். இந்த மரணத்தில் நிறைய சந்தேகங்கள் உள்ளன.

காவல்துறையினர் புலன் விசாரணை நடத்துகிறார்கள். வெளிப்படையான விசாரணை நடந்து வருகிறது. உடற்கூராய்வு அறிக்கை தற்போது வரை எங்கள் கைக்கு கிடைக்கப் பெறவில்லை. உயிரிழந்த ஜெயக்குமார் கையும் காலும் கட்டப்பட்டதாக எங்கள் கட்சியை சார்ந்தவர்களே எங்களிடம் கூறுகிறார்கள். இதன்பின் யார் இருந்தாலும் நாங்கள் விடமாட்டோம்” என தெரிவித்தார்.

திருநெல்வேலி மாவட்ட கண்காணிப்பாளர் சிலம்பரசன் புதிய தலைமுறைக்கு தொலைபேசி மூலம் பேசுகையில், “காங்கிரஸ் கட்சி மாவட்ட தலைவரின் உடற்கூராய்வு அறிக்கை இன்னும் எங்கள் கைக்கு வரவில்லை. அனைத்து கோணங்களிலும் விசாரணை நடைபெற்று வருகிறது.

இன்னும் இரண்டு நாட்களில் காவல்துறையே முழுமையான விசாரணையை முடித்துவிட்டு, பத்திரிகை செய்தி தருகிறோம்” என தெரிவித்தார்.

டிஐஜி மூர்த்தி தெரிவிக்கையில், “மரணமடைந்த காங்கிரஸ் நிர்வாகியின் கடிதம் தொடர்பாக விசாரித்து வருகிறோம்; கடிதத்தில் குறிப்பிடப்பட்ட நபர்களிடம் விசாரணை நடக்கிறது.

#BREAKING | நெல்லை காங். நிர்வாகி கடிதம்- டிஐஜி விளக்கம்

மே 3ல் ஜெயக்குமாரின் மகன் புகார் தரும்போதுதான் எஸ்.பி., மருமகனுக்கு அவர் எழுதிய 2 கடிதங்கள் தரப்பட்டன; உடற்கூறாய்வு அறிக்கை வந்த பிறகே கொலையா, தற்கொலையா என்பது தெரியவரும்” என்றார்.

முன்னதாக நெல்லை மாவட்ட காவல் கண்பாணிப்பாளர் கடந்த 30 ஆம் தேதி நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் தனசிங் மரண வாக்குமூலம் என்ற பெயரில் புகார் மனு ஒன்று திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் அளிக்கப்பட்டது எனக்குறிப்பிட்டு, சமூக வலைதளத்தில் பரவி வரும் தகவல் உண்மைக்கு புறம்பானதாகும் என்று அறிக்கை வெளியிட்டிருந்தார்.

இதற்கிடையே, ஜெயக்குமார் எழுதிய 2 கடிதங்கள் சிக்கின. அதுபற்றிய விவரங்களுக்கு கீழ் இணைக்கப்பட்டுள்ள வீடியோவை காணலாம்...: