மக்களவை தேர்தல் முகநூல்
தமிழ்நாடு

மக்களவை தேர்தல் 2024 | வாக்குப்பதிவு சதவீதத்தில் முரண்பாடு ஏன்..? சத்ய பிரதா சாகு விளக்கம்!

ஜெனிட்டா ரோஸ்லின்

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 மக்களவை தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது. காலை 7 மணி முதலே வாக்குச்சாவடிக்கு ஆர்வமுடன் வருகை தந்த பொதுமக்கள், தங்களது ஜனநாயக கடமையை ஆற்றினர். மாலை 6 மணிக்கு வாக்குப்பதிவு நிறைவடைந்தபோதும், அதற்கு முன்பாக வாக்குச்சாவடிக்கு வந்தவர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு 6 மணிக்கு பிறகும் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டது.

மக்களவை தேர்தல் 2024 | வாக்கு

இந்நிலையில், மாலை 7 மணி நிலவரப்படி 72.09 சதவீதம் வாக்குகள் பதிவானதாகத் தகவல்கள் வெளியாகின. ஆனால் தமிழ்நாட்டில் பதிவான மொத்த வாக்குப்பதிவு 69.46 சதவீதம் என இந்தியத் தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ தகவலை இரவு 12 மணியளவில் அறிவித்தது.

மாலை 7 மணிக்கு வெளியான வாக்குப்பதிவு சதவீதத்திற்கும், இரவு 12.05க்கு இந்திய தேர்தல் ஆணையத்தால் வெளியான வாக்குப்பதிவு சதவீதத்திற்கும் இடையே 3 சதவீதம் முரண்பாடு நிலவுவது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. ஒட்டுமொத்தமாக 3% வேறுபாடு உள்ள நிலையில், ஒருசில இடங்களில் 13% அளவுக்கு வேறுபாடு நிலவுவதும் தெரியவந்துள்ளது.

உதாரணமாக, மத்திய சென்னையை பொறுத்தவரை நேற்று மாலை வரை 67% வாக்குப்பதிவாகி இருப்பதாக கூறப்பட்டது. ஆனால் இரவு 12 மணிக்கு வந்த அறிவிப்பில் 53% வாக்குகள் பதிவாகியுள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இது மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வழக்கமாக 1 அல்லது 2% மட்டுமே முரண் இருப்பது வழக்கம். அப்படியிருக்க இம்முறையோ முதல் 5 இடங்களில் உள்ள தூத்துக்குடியில் 10 சதவீதம் குறைவாகவும், ஸ்ரீபெரும்புதூரில் 9.58%, வடச்சென்னையில் 9%, சிவகங்கையில் 7%, திருச்சியில் 7% குறைவாகவும் காட்டப்பட்டுள்ளது.

இது குறித்து வடசென்னைக்கு உட்பட்ட தேர்தல் அதிகாரி ரவி தேஜாவிடம் நாம் கேட்டபோது, “வழக்கமாக சாம்பிள்ஸ் மூலமாக இந்தத் தரவுகள் முதலில் 2 மணி நேரத்திற்கு ஒருமுறை கொடுக்கபடும். இதன் பிறகுதான், அதாவது தாமதமாகதான் சரியான தரவுகள் தரப்படும். அதனால்தான் இந்த முரண்பாடு” என்று தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இன்று காலை நடைபெறவிருந்த தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவின் செய்தியாளர் சந்திப்பு ரத்து செய்யப்பட்டு மதியம் 3 மணிக்கு செய்திக் குறிப்பு மட்டுமே வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் இந்த வாக்கு முரண் குறித்து தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவிடம் நாம் கேட்டபோது, “சாம்பிள்ஸ் காரணமாகதான் இந்த முரண்பாடு. சரியான தகவல் இரவு 12 மணிக்கு வந்ததால் இந்த குழப்பம் ஏற்பட்டுள்ளது” என்றார். இருப்பினும் இது மிகப்பெரிய கேள்வியையும், குழப்பத்தினையும் ஏற்படுத்தியுள்ளது.