தமிழ்நாடு

அமரர் ஊர்திகளுக்கு டீசல் நிதி ஒதுக்கவில்லை: பொதுமக்கள் அவதி

அமரர் ஊர்திகளுக்கு டீசல் நிதி ஒதுக்கவில்லை: பொதுமக்கள் அவதி

webteam

கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இலவச அமரர் ஊர்திகளுக்கு டீசல் நிதி ஒதுக்கப்படாததால், இறந்தவர்களின் உடல்களை கொண்டு செல்வதில் சிரமம் ஏற்படுவதாக புகார் எழுந்துள்ளது.

கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இலவச அமரர் ஊர்திகளுக்கு டீசல் போடுவதற்கு நிதி இல்லாததால் வாகனங்கள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. இதனால் இறந்தவர்களின் உடல்களை கொண்டு செல்வதில் உறவினர்களுக்கு சிரமம் நிலவுகிறது. ஒரே வாகனத்தில் மூன்று முதல் நான்கு உடல்களை எடுத்துச்செல்லும் நிலை உள்ளது.

செஞ்சிலுவை அமைப்பால் இந்த ஊர்திகள் பராமரிக்கப்பட்டு வந்தாலும் இவற்றுக்கான நிதி தமிழக அரசால் ஒதுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த வாரம் வாகனத்திற்கு டீசல் போடுவதற்கான தொகையை ஒதுக்காமல் உள்ளதாக கூறப்படுகிறது. இலவச அமரர் ஊர்தி வாகனங்கள் இயக்கப்படாமல் மருத்துவமனையில் உள்ள பிரேதப் பரிசோதனை கூடத்திற்கு அருகிலேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. 
இதன் காரணமாக உடற்கூறு ஆய்வு முடிந்து சொந்த ஊருக்கு உடல்களை கொண்டு செல்வதற்கு வாகனங்கள் இல்லை என பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். இது குறித்து இலவச அமரர் ஊர்தியின் செஞ்சிலுவைச் சங்க கோவை மாவட்ட பொறுப்பாளர் நவீனிடம் கேட்டபோது, தமிழகம் முழுவதும் நிதி ஒதுக்காமல் இந்த பிரச்னை நிலவி வருவதாகவும், இந்த பிரச்னையை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் கூறினார்.