கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த கோழியூர் கிராமத்தில் வெல்லிங்டன் நீர்த்தேக்கத்திலிருந்து செல்லும் பாசன வாய்க்காலில், பிறந்து ஒரு நாளேயான ஆண் சிசு தொப்புள்கொடியுடன் சடலமாக மீட்கப்பட்டது. இதனால் கோழியூர் பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்து, போலீஸிக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸார், பிறந்த குழந்தையை பாசன வாய்க்காலில் வீசி சென்றதால் இறந்ததா? அல்லது இறந்த குழந்தையை பாசன வாய்க்காலில் வீசி சென்றனரா? என்ற கோணத்தில் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.
அத்தோடு, அந்த கிராம மக்கள் யாரும் குழந்தையை வீசினார்களா என்றும், வேறு கிராமத்தில் இருந்து பாசன வாய்க்காலில் குழந்தை வீசப்பட்டு தண்ணீரில் அடித்து வரப்பட்டதா என்றும் போலீஸார் விசாரித்து வருகின்றனர். இதற்கிடையே, குழந்தையின் சடலம் சிதைந்த நிலையில் மீட்கப்பட்டது. அதனை மருத்துவமனைக்கு எடுத்துச்சென்று உடற்கூறாய்வு நடத்தும் பணிகளும் நடந்து வருகின்றன.
இந்த இடத்தில், கடந்த ஆண்டு ஜனவரி மாதம் பிறந்து சில நாட்களேயான பெண் சிசுவின் சடலம் கண்டெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இப்பகுதியில், தொடர்ச்சியாக பிறந்த குழந்தையை பாசன வாய்க்காலில் வீசிச் செல்பவர்கள் மீது, கொலை வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.