தென் மாவட்டங்களில் முதல்வர் நடத்தியது கள ஆய்வா அல்லது ரோடு ஷோவா? என முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கடுமையாக விமர்சித்துள்ளார்.
அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ”ஸ்டாலின் எதிர்க் கட்சியாக இருந்தபோது 520 தேர்தல் வாக்குறுதிகளை அளித்தார். அதில் இன்னும் 25 சகவீதம் தான் நிறைவேற்றப்படாமல் உள்ளது என்று கூறும் கருத்துக்கு எந்த ஆதாரமும் இல்லை. இதுவரை அவர் எதையுமே நிறைவேற்றவில்லை என்பதுதான் நிதர்சனமான உண்மை.
சொத்து வரி உயர்வு, மின்சார கட்டண உயர்வு, பால் விலை உயர்வு, விலைவாசி உயர்வு ஆகியவை மூலம் இன்றைக்கு மக்கள் துன்பத்தில் வேதனையில் இருப்பதை கவனத்தில் எடுத்துக் கொள்ளாமல், மண்டல அளவில் களப்பணி என்று ரோடு ஷோ நடத்துவதில் கவனம் செலுத்துகிறார்.
மாவட்ட வாரியாக கொடுக்கிற வாக்குறுதிகளும் நிலுவையில் இருக்கிறது. கள ஆய்வில் விவசாயிகளை சந்தித்தேன், தொழில் முனைவோர்களை சந்தித்தேன், மாணவர்களை சந்தித்தேன், மகளிர் சுய உதவிக் குழுவினரை சந்தித்தேன் என்று சொல்லுகிறார். ஆனால், அவர்களுடைய கோரிக்கை எதுவும் நிறைவேறவில்லை.
தென் மாவட்டத்தின் நுழைவுப் பகுதியாகி இருக்கும் கப்பலூர் டோல்கேடை அகற்றுவேன் என்று எதிர்க்கட்சியாக இருந்தபோது வாக்குறுதி கொடுத்தார் ஸ்டாலின். அதை நினைவூட்டும் வகையில் அந்த மீட்புக் குழுவினர் மனுக்கள் கொடுத்தபோது அதை வாங்கக் கூட அவருக்கு மனம் இடம் தரவில்லை. கொடுத்த வாக்குறுதிகளை செயல்படுத்த எந்த அளவில் உறுதியாக இருக்கிறார் என்பதற்கு இதுவே ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்.
தேர்தல் வாக்குறுதிகளை காற்றில் பறக்கவிட்டு, மாவட்ட வாரியாக தங்களை அடையாளப்படுத்த அடையாள அணிவகுப்பை நடத்தி வருகிறார். விளம்பர வெளிச்சத்தில் அரசை நடத்துகிறார். .ஆங்காங்கே மக்களை நிற்க வைத்து மனுக்களை பெறுவது போல் ரோடு ஷோவை நடத்துகிறார்.
கொடுக்கும் மனுக்கள் காகிதம் அல்ல, வாழ்க்கை என்று ஸ்டாலின் கூறுகிறார். அந்த மனுக்கள் வாழ்க்கை அல்ல, மக்களின் உயிராகும். ரெண்டு நாள் கள ஆய்வு என்பது கண்காணிப்பு நாடகமாகும். எடப்பாடியார் கொண்டு வந்த கூட்டு குடிநீர் திட்டம், பாலங்கள், எய்ம்ஸ் மருத்துவமனை, திருமங்கலம் தொகுதியில் பேருந்து நிலையம், ரயில்வே மேம்பாலங்கள் ஆகியவை குறித்து எந்த ஆய்வுகளும் மேற்கொள்ளவில்லை.
ஸ்டாலின் அறிவுரை மட்டும் தான் வழங்கி உள்ளார், அது ஆய்வு கூட்டம் அல்ல. அதிகாரிகளுக்கு அறிவுரை சொல்ல சென்னை, செங்கல்பட்டில் இருந்து கூட கூறலாம். ஸ்டாலின் நடத்தியது கள ஆய்வு கூட்டமா, அறிவுரை கூட்டமா என்று மக்களிடத்தில் விவாதம் நடைபெற்று வருகிறது. கள ஆய்வில் மக்களுக்கான திட்டங்களுக்கு விடை காண முடியவில்லை. இனிவரும் காலங்களில் விளம்பர ரகசியத்தை ஒழித்து விட்டு மக்களுக்கான திட்டங்களை பற்றி சிந்திக்க வேண்டும்” என்று கூறினார்.