புதுச்சேரி சொகுசு விடுதியில் முகாமிட்டிருந்த டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் அங்கிருந்து காலி செய்துவிட்டு மைசூர் புறப்பட்டனர்.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு அளித்துவந்த ஆதரவை திரும்பப் பெறுவதாக ஆளுநரிடம் கடிதம் அளித்த தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 19 பேர், புதுச்சேரியில் உள்ள தனியார் விடுதியில் தங்கி வந்தனர். ஆகஸ்ட் 22 ஆம் தேதி முதல் தங்கியிருந்த எம்.எல்.ஏ.க்கள் இன்று அங்கிருந்து புறப்பட்டு மைசூர் செல்வதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆளுநர் வித்யாசாகர் ராவை தினகரன் இன்று காலை சந்தித்துள்ள நிலையில், எம்.எல்.ஏ.க்கள் மைசூரு புறப்பட்டுள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
குஜராத் மாநிலங்களவை தேர்தலின்போது அம்மாநில காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் 40-க்கும் மேற்பட்டோர் கர்நாடக மாநிலம் பெங்களூரில் தங்கியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.