தமிழ்நாடு

சிறுமி கொலை வழக்கு உருக்கமாக பேசிய நீதிபதிகள் : தஷ்வந்த் தூக்கு உறுதி!

சிறுமி கொலை வழக்கு உருக்கமாக பேசிய நீதிபதிகள் : தஷ்வந்த் தூக்கு உறுதி!

webteam

தஷ்வந்தின் கடைசி நொடி, பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுவோரின் கடைசி நொடியாக இருக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். 

தஷ்வந்த் தூக்குத்தண்டனையை உறுதி செய்து உயர்நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.விமலா, எஸ்.ராமத்திலகம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளனர். அதில், திருமணத்தின் போது மகளை பிரிவதையே பெற்றோர் சிரமமாக கருதும் நிலையில், கொடூரமான முறையில் தங்கள் குழந்தை கொல்லப்பட்டதன் வலியை நீதிமன்றத்தின் வெறும் வார்த்தைகளால் ஈடுசெய்ய முடியாது என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். குழந்தை பருவத்தை அனுபவிக்க அனைத்து குழந்தைகளுக்கும் அரசியல் சாசனம் உரிமை வழங்கியுள்ளதை சுட்டிக்காட்டியுள்ளனர். குழந்தைகளின் பாதுகாப்பிற்கு எந்த உத்தரவாதமும் இல்லாத சமுதாயத்தில் வாழ்ந்து வருவதாக நீதிபதிகள் வேதனை தெரிவித்தனர்.

மொட்டு மலராகும் முன்பே சாம்பலாக்கப்பட்டுள்ளதாக வேதனைப்பட்ட நீதிபதிகள், குற்றம்சாட்டப்பட்டவரின் மனநிலையின் கொடூரம், அவரது குற்றத்தைவிட மிக கொடூரமாக உள்ளதாக கூறினர். சிறுமியை வன்கொடுமை செய்து கொடூரமாக கொன்ற தஷ்வந்த்தின் குற்றத்திற்கு தூக்கு தண்டனையை விட வேறு எந்தத் தண்டனையும் ஈடாகாது எனவும் திட்டவட்டமாக தெரிவித்தனர். தூக்குத்தண்டனைக்கு எதிராக குரல்கள் எழுந்தாலும், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களுக்கு அதிகபட்ச தண்டனை அவசியம் என அவர்கள் குறிப்பிட்டனர்.