தமிழ்நாடு

ப்ளூவேல் விபரீதம் : தருமபுரியில் படுகாயங்களுடன் மீட்கப்பட்ட மாணவன்

ப்ளூவேல் விபரீதம் : தருமபுரியில் படுகாயங்களுடன் மீட்கப்பட்ட மாணவன்

webteam

தருமபுரி அருகே ப்ளூவேல் கேம் விளையாடி, கைகளை பிளேடால் வெட்டிக்கொண்ட மாணவர் மீட்கப்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தருமபுரி மாவட்டம் இண்டூர் அருகே உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் பதினோராம் வகுப்பு படிக்கும் மாணவனின் நடத்தையில் மாற்றம் தெரிந்ததால் அவனது பெற்றோர் கண்காணிக்க தொடங்கியுள்ளனர். இந்நிலையில் அந்த மாணவர் திடீரென பிளேடால் தன் விரல்களை அறுத்துள்ளார். அத்துடன் அவரது நோட்டுகளிலும் திமிங்கலத்தின் படத்தை வரைந்து வைத்திருப்பது தெரிய வந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர்கள் காவல்துறையினரிடம் தெரிவித்துள்ளனர். 

இதுகுறித்து விசாரித்த போது மாணவன் மூர்க்கமாக நடந்து கொண்டதால், தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். அப்போது நடத்திய விசாரண‌யில் ப்ளூவேல் விளையாடியதை மாணவன் ஒப்புக்கொண்டதை அடுத்து, மனநல சிகிச்சை பிரிவில் அந்த மாணவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் மாணவரின் நண்பர்கள் யாராவது ப்ளூவேல் விளையாட்டால் பாதிக்கப்பட்டுள்ளார்களா என்று காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். இதே போல் கூடலூர் அரசு பள்ளியிலும் 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் ஒருவர் ப்ளுவேல் விளையாட துவங்கி மூன்றாவது நாளில் மீட்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.‌