தமிழ்நாடு

குடிநீர் தொட்டியில் மலம் கலந்த குற்றவாளிகளை கைது செய்யக் கோரி தர்ணா போராட்டம்

குடிநீர் தொட்டியில் மலம் கலந்த குற்றவாளிகளை கைது செய்யக் கோரி தர்ணா போராட்டம்

webteam

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கை வயலில் குடிநீர் தொட்டியில் மலம் கலந்த குற்றவாளிகளை கைது செய்யக் கோரி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

புதுக்கோட்டை மாவட்டம் இறையூர் வேங்கை வயலில் பட்டியலின சமூக மக்கள் வசிக்கும் பகுதியில் அமைந்துள்ள குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மனித கழிவு கலக்கப்பட்ட விவகாரம் ஒட்டுமொத்த மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது இந்நிலையில், இந்த வழக்கை முதலில் தமிழக காவல் துறையினரும் தற்போது சிபிசிஐடி போலீசாரும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், இந்த சம்பவம் நடந்து 25 நாட்களுக்கு மேலாகியும், இந்த வழக்க தொடர்பான குற்றவாளிகளை இதுவரை கைது செய்யவில்லை என குற்றம்சாட்டி இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாநில குழு சார்பாக இன்று வேங்கை வயல் கிராமத்தில் உள்ள குடிநீர் தொட்டி இடிப்பு போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து இன்று திருச்சி - புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சத்தியமங்கலம் எனும் இடத்தில் இருந்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் ஊர்வலமாக புறப்பட்டு வேங்கை வயல் கிராமத்தை நோக்கச்p சென்றனர். அவர்களை பாதி வழியில் தடுத்து நிறுத்திய ஏடிஎஸ்பி ரமேஷ் கிருஷ்ணன் தலைமையிலான போலீசார், சமரச பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். இதையடுத்து அவர்கள் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனிடையே இலுப்பூர் கோட்டாட்சியர் (பொறுப்பு) மாரி தலைமையிலான அதிகாரிகள், இந்திய ஜனநாயக வாலிபர் சங்க பிரதிநிதிகளோடு பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையின் முடிவில் சிபிசிஐடி போலீசாரின் விசாரணை முடிந்து குற்றவாளிகளை கண்டறிந்ததும் சம்பந்தப்பட்ட குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியை இடிக்க நடவடிக்கை எடுப்பதாக கோட்டாட்சியர் மாரி உத்திரவாதம் அளித்தார்.

இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் தங்களது போராட்டத்தை கைவிட்டனர். எனினும் அவர்களை கைது செய்த போலீசார், தனியார் மண்டபத்திற்கு அழைத்துச் சென்றனர்.