தமிழ்நாடு

தருமபுரி: தைபூசத் தேர் திருவிழா... அரோகரா கோஷத்துடன் தேரை வடம்பிடித்து இழுத்த பெண்கள்

தருமபுரி: தைபூசத் தேர் திருவிழா... அரோகரா கோஷத்துடன் தேரை வடம்பிடித்து இழுத்த பெண்கள்

kaleelrahman

தருமபுரி குமாரசாமிபேட்டை சிவசுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் தைப்பூசத் தேர் திருவிழாவில் பெண்கள் மட்டுமே வடம்பிடித்து இழுத்த தோரோட்டம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பெண்கள் பங்கேற்றனர்.


தருமபுரி குமாரசாமி பேட்டையில் உள்ள புகழ்பெற்ற அருள்மிகு சிவசுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலின் தைப்பூசத் திருவிழா கடந்த 24 ஆம் தேதி கொடி ஏற்றத்துடன் துவங்கி தொடர்ந்து 7 நாட்கள் நடைபெற்று வருகிறது. இந்த 7 நாட்களில், ஒவ்வொரு நாளும் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும் வழிபாடுகளும் நடத்தப்பட்டது.

இதில் பெண்கள் மட்டுமே கலந்து கொண்டு வடம் பிடிக்கும் திருவிழா இன்று நடைபெற்றது. இதில் சிவசுப்பிரமணிய சுவாமி அலங்கரிக்கப்பட்ட தேரினை ஆயிரக்கணக்கான பெண்கள் மட்டுமே வடம் பிடித்து இழுத்தனர். இந்த தேர் வீதிஉலாவில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அப்போது பக்தர்கள் முருகனுக்கு அரோகரா என தேரை வடம்பிடித்து இழுத்து சென்றனர். இந்த தேர் வீதிஉலா வரும்போது, பக்தர்கள் உப்பு, மிளகு, பொரி, முத்துக்கொட்டைகளை தேர் மீது வீசி தங்களது நேர்த்திக் கடன்களை செலுத்தி வழிபட்டனர்.


இந்த திருவிழாவிற்கு உள்ளூர் மற்றும் வெளியூரில் இருந்து ஆயிரக்கணக்கான பெண்கள் வந்து சாமி தரிசனம் செய்தனர். இந்த திருவிழாவிற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தருமபுரி மாவட்ட காவல் துறை சார்பில் 100-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.