Collector office pt desk
தமிழ்நாடு

தருமபுரி | ”ஊரை விட்டு ஒதுக்கி வைத்துவிட்டார்கள்” - அரசு ஆவணங்களை ஒப்படைக்க வந்த குடும்பத்தினர்!

webteam

செய்தியாளர்: சே.விவேகானந்தன்

தருமபுரி மாவட்டம் சின்ன குப்பூர் கிராமத்தைச் சேர்ந்த அப்பாமணி. தனது பூர்வீக விவசாய நிலத்தில் விவசாயம் செய்து, குடும்பத்தோடு வசித்து வருகிறார். இந்த நிலையில், அதே ஊரைச் சார்ந்த பச்சையம்மாள் என்பவரிடம் அவருக்கு அடிக்கடி பணம் கொடுக்கல் வாங்கல் இருந்துள்ளது.

இதில் தனது நிலத்தை வைத்து வட்டிக்கு பணம் பெற்றதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து பச்சையம்மாளுக்கு கொடுக்க வேண்டிய அசல் மற்றும் வட்டித் தொகையை பெற்றுக் கொண்டு, நிலத்தை கொடுக்க வேண்டும் என வலியுறுத்தி வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.

Families

இது தொடர்பாக தருமபுரி நகர காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். ஆனால், காவல் நிலையத்தில் பச்சையம்மாளுக்கு ஆதரவாக நிலத்தை எழுதிக் கொடுக்கச் சொல்லி மிரட்டியதாகக் கூறப்படுகிறது.

அப்பாமணி நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார். அப்போது நீதிமன்றம், சட்டத்துக்கு புறம்பான வழியில் அப்பாமணி உள்ளிட்டவரை தொந்தரவு செய்யக் கூடாது என தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த செல்வராஜ், முனியப்பன், கோவிந்தராஜ், சின்னசாமி, கண்ணன், கிருஷ்ணன், குழந்தை, மாது, ஆறுமுகம் உள்ளிட்டோர் அடங்கிய ஊர் பஞ்சாயத்துதாரர்கள், கட்டப்பஞ்சாயத்து செய்து அப்பாமணியை அழைத்து நிலத்தை உடனே பச்சையம்மாளுக்கு பதிவு செய்து கொடுக்க வேண்டும் என மிரட்டியதாகக் கூறப்படுகிறது.

மேலும், தங்களை பகைத்துக் கொண்டு இந்த ஊரில் எப்படி வாழ்ந்து விடுவாய் எனவும் கூறி மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. இதனை அடுத்து கடந்த 2019 ஆம் ஆண்டு அறுவடைக்கு தயாராக இருந்த சோளக்கதிர்களையும், பயிரையும் சிலர் அறுத்து எடுத்து சென்றதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், அப்பாமணி மற்றும் அவரது குடும்பத்தினர் ஊர் பஞ்சாயத்துக்கு கட்டுப்படாததால் தண்ணீர் மற்றும் வழிபாட்டு தலங்கள், பொது இடங்களில் கால்நடைகளை மேய்க்கக் கூடாது எனவும், குடும்பத்தினரை ஊரை விட்டு ஒதுக்கி வைத்துள்ளதாகவும், கூறப்படுகிறது.

இது சம்பந்தமாக மாவட்ட ஆட்சித் தலைவர், முதலமைச்சரின் தனிப்பிரிவு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் புகார் அளித்தும், இவர்களுக்கு உரிய பதில் கிடைக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

women with document

இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு ஊரில் துக்க நிகழ்வு ஒன்றுக்கு அப்பாமணி குடும்பத்தினர் சென்றுள்ளனர். அப்பொழுது அந்த நிகழ்வில் கலந்து கொள்ளக் கூடாது என தடுத்ததாகவும், இவர்களுடன் யாரேனும் தொடர்பு வைத்துக் கொண்டால், அவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் எனவும் கிராம மக்களுக்கு, ஊர் பஞ்சாயத்தார்கள் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

இதனால் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு மேலாக மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி இருப்பதாகவும், அரசு தரப்பில் எத்தனை புகார்கள் கொடுத்தாலும், தங்களுக்கு தீர்வு கிடைக்கவில்லை. எனவே தங்களுக்கு வழங்கிய அரசு ஆவணங்களான ஆதார், குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை ஆகியவற்றை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒப்படைக்கச் செல்வதாக நான்கு குடும்பத்தினர் தெரிவித்தனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.