4 கிமீ தூரம் நடந்து செல்லும் மாணவர்கள் pt desk
தமிழ்நாடு

தருமபுரி: பேருந்து வசதி இல்லாததால் 4 கிமீ தூரம் நடந்து செல்லும் பள்ளி கல்லூரி மாணவர்கள்

தருமபுரி அருகே பேருந்து வசதி இல்லாததால் பள்ளி, கல்லூரி மாணவர்கள் 4 கிலோ மீட்டர் தூரம் நடந்து செல்லும் நிலை உள்ளது. கொரோனா பேரிடரின்போது நிறுத்தப்பட்ட அரசுப் பேருந்தை மீண்டும் இயக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

webteam

செய்தியாளர்: விவேகானந்தன்

மொரப்பூர் அடுத்த மாரப்ப நாயக்கன்பட்டி, போளையம்பள்ளி, பொம்பட்டி, ஜடையம்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் இருந்து தருமபுரி, கோபிநாதம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்த 4 கிராம மக்களின் வசதிக்காக, பள்ளி, கல்லூரி நேரங்களில் ஒரு அரசுப் பேருந்து இயக்கப்பட்டு வந்தது.

4 கிமீ தூரம் நடந்து செல்லும் பள்ளி கல்லூரி மாணவர்கள்

ஆனால், கொரோனா பேரிடரின்போது நிறுத்தப்பட்ட அந்த பேருந்து மீண்டும் இயக்கப்படவில்லை. இதனால், மாணவர்கள் அனைவரும் நடந்தே கோபிநாதம்பட்டி வரை சென்று அங்கிருந்து மற்றப் பகுதிகளுக்கு செல்லும் நிலை உள்ளது. ஜடையம்பட்டி கோபிநாதம்பட்டியிலும் பேருந்துகளில் கூட்ட நெரிசல் காரணமாக மாணவர்கள் பேருந்துப் படிகளில் ஆபத்தாக பயணம் செய்யும் நிலை ஏற்படுகிறது.

சில நேரங்களில் அரசு பேருந்து நடத்துநர்கள் தங்களை தகாத வார்த்தைகளால் திட்டுவதாகவும் மாணவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். சிறப்பு வகுப்பு முடிந்து இரவு நேரத்தில் வீடு திரும்பும்போது பேருந்து வசதி இல்லாததால் மாணவர்கள் அச்சத்துடனே செல்ல வேண்டியுள்ளது. கொரோனா காலத்தில் நிறுத்தப்பட்ட பேருந்துகளை மீண்டும் இயக்க பல முறை கோரிக்கை வைத்தும் நடவடிக்கை இல்லை என்கின்றனர் கிராம மக்கள்.

4 கிமீ தூரம் நடந்து செல்லும் பள்ளி கல்லூரி மாணவர்கள்

இது குறித்து தருமபுரி ஆட்சியர் சாந்தியிடம் கேட்டபோது, கோபிநாதம்பட்டி பகுதியிலிருந்து 4 கிராமங்களை இணைக்கும் வகையில், மீண்டும் பேருந்து சேவை தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார். அதே போன்று, பள்ளி மாணவ, மாணவிகளை, நடத்துநர் தகாத வார்த்தைகளால் பேசியது குறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.