தமிழ்நாடு

தருமபுரி: மருத்துவமனை வளாகத்தில் கொட்டப்படும் மருத்துவக் கழிவுகளை அகற்ற கோரிக்கை

kaleelrahman

தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொட்டப்பட்டுள்ள மருத்துவக் கழிவுகளால் துர்நாற்றம் வீசி, நோய் தொற்று ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு தருமபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, திருப்பத்தூர், சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 2,000-க்கும் மேற்பட்டோர் உள் மற்றும் வெளி நோயாளிகளாக தினமும் வந்து செல்கின்றனர். இந்நிலையில் கொரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாகவும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இவர்களுக்கு தொடர்ந்து மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இந்நிலையில் அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட பின், மருததுவர்கள் பயன்படுத்திய முகக்கவசம், கையுறை, கவச உடைகள் மற்றும் நோயாளிகளுக்கு பயன்படுத்திய சிரஞ்சி, மருந்து பாட்டில்கள் உள்ளிட்ட மருத்துவக் கழிவுகள் மற்றும் உணவு பொட்டலங்கள், துணி உள்ளிட்டவை மருத்துவமனை வளாகத்தில் கொட்டப்பட்டுள்ளது. இந்த குப்பைகள் முழுவதும் அகற்றப்படாமல் மலை போல் தேங்கியுள்ளது.

இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் நோய் பரவும் அபாயம் உள்ளது. இந்த பகுதியில் உள்ள நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த அவதிப்பட்டு வருகின்றனர். இங்கு கொட்டப்பட்டுள்ள கழிவுகள் சிகிச்சைக்கு பயன்படுத்தியதா? அல்லது கொரோனோ நோயாளிகளுக்கு பயன்படுத்தியதா என்ற அச்சமும் எழுந்துள்ளது. எனவே தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொட்டப்பட்டுள்ள மருத்துவ கழிவுகளை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.