தருமபுரி அருகே பாலியல் வன்கொடுமையால் உயிரிழந்த மாணவியின் உடல் அவரது சொந்த கிராமத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
தருமபுரி அருகே மலைக்கிராமத்தைச் சேர்ந்த 12ஆம் வகுப்பு மாணவியை அதே ஊரைச் சேர்ந்த சதீஷ் மற்றும் ரமேஷ் ஆகியோர் வன்கொடுமை செய்தனர். இதனையடுத்து மருத்துவமனையில் மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது உயிரிழப்பிற்கு காரணமானவர்களை கைது செய்யக்கோரி மலைக்கிராம மக்கள் இரண்டு நாட்களாக சாலை மறியலில் ஈடுபட்டனர்
குற்றஞ்சாட்டப்பட்ட சதீஷ் கைதான நிலையில் மற்றொருவரான ரமேஷ், சேலம் நீதிமன்றத்தில் சரண் அடைந்தார். அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனையை அரசு பெற்றுத்தர வேண்டும், உரிய நடவடிக்கை மற்றும் சிகிச்சை அளிக்காத காவல்துறையினர், மருத்துவர்கள் மீது தீண்டாமை வன்கொடுமை தடுப்புச்சட்டம் மற்றும் போக்ஸோ சட்டப் பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைளை மாணவியின் உறவினர்கள் வலியுறுத்தினர்.
மேலும் ,பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு ஒரு கோடி ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும் எனவும் கோரி மாணவியின் உடலை வாங்க மறுத்தனர். இதையடுத்து, பொறுப்பு கண்காணிப்பாளரான மகேஸ்குமார் போராட்டக்காரர்களுடன் நடத்திய சமரச பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதையொட்டி, பிரேத பரிசோதனை நடைபெற்றது. பின்னர் உறவினர்களிடம் உடல் ஒப்படைக்கப்பட்டது. இதையடுத்து சொந்த கிராமத்தில் மாணவியின் உடலுக்கு பொதுமக்கள் ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர். பின்னர் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.