தமிழ்நாடு

மின்கம்பத்தை ஒட்டி பேனர் வைத்த திமுகவினர்! ஜேசிபி உதவியால் கம்பத்தில் ஏறிய மின் ஊழியர்!

மின்கம்பத்தை ஒட்டி பேனர் வைத்த திமுகவினர்! ஜேசிபி உதவியால் கம்பத்தில் ஏறிய மின் ஊழியர்!

webteam

தருமபுரியில் மின்கம்பத்தை ஒட்டி திமுகவினர் விளம்பர பதாகை வைத்ததால், கம்பத்தின் மீது ஏற முடியாமல், ஜேசிபி உதவியுடன் மின் கம்பத்தில் ஏறி பணிசெய்யவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டார் மின் ஊழியர்.

தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினின் 70 ஆவது பிறந்தநாளை திமுக தொண்டர்கள் விமர்சையாக கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் நாளை மார்ச் ஒன்று வருவதற்கு முன்பாகவே தமிழக முதலமைச்சர் தனது பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்து, விளம்பர பதாகைகள் வைக்கவேண்டாம், ஆடம்பரம் வேண்டாம், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்த வேண்டாம். ஏழை, எளியோர், ஆதரவற்றோர், வயது முதிர்ந்தவர்கள் உள்ளிட்ட பொதுமக்களுக்கு நலத்திட்டங்களை வழங்குங்கள் என நேற்று முன்தினம் அறிக்கை விடுத்து இருந்தார்.

ஆனாலும் தருமபுரி மாவட்ட திமுகவினர், தருமபுரி நகரம், அரூர் நகரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் முதலமைச்சரின் மீது கொண்ட அதீத பற்றால் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்து பதாகைகளை வைத்துள்ளனர். மேலும் தருமபுரி நகர பகுதியில் நெசவாளர் காலனி அருகே வாழ்த்து பதாகையை மின்கம்பத்தில் கட்டியுள்ளனர்.

இந்நிலையில், நெசவாளர் காலனி அருகே உள்ள திருமண மண்டபம் தற்பொழுது இடிக்கப்பட்டு வருகிறது. இதனால் அந்த திருமண மண்டபத்திற்கு செல்கின்ற மின் இணைப்பை துண்டிப்பதற்காக, மின் ஊழியர்கள் வந்தனர். ஆனால், மின்கம்பத்தில் ஏற முடியாத அளவிற்கு விளம்பர பதாகை கட்டப்பட்டிருந்தால், மின் ஊழியர்களால் மின் இணைப்பு துண்டிக்க முடியாத நிலை ஏற்பட்டது.

இதனைத் தொடர்ந்து அருகில் கட்டட இடிப்பு பணியில் ஈடுபட்டிருந்த ஜேசிபி இயந்திரத்தை கொண்டுவந்து, ஜேசிபி இயந்திரத்தின் உதவியுடன் மின் ஊழியர் மின் கம்பத்தில் ஏறி மின் இணைப்பைத் துண்டித்தார். இதனால், ஜேசிபி நீண்ட நேரமாக மின் கம்பத்தின் அருகிலேயே நிறுத்தி வைக்கப்பட்டது. மேலும், தனது பிறந்தநாளில் ஆடம்பரம் வேண்டாம் என முதல்வர் அறிக்கை விடுத்தும், தருமபுரி திமுகவினர் அவர் மீது கொண்ட அதீத பற்றால் பல்வேறு இடங்களில் களில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து பதாகைகள் வைத்துள்ளனர்.

தருமபுரியில் திமுகவினர் வைத்த விளம்பர பதாகையால் மின்கம்பத்தில் ஏற முடியாமல் ஜே சி பி உதவியுடன் பணியை செய்த சம்பவம் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.