தமிழ்நாடு

“பொரியல் எதுவும் இல்லையா?” - மாணவர் விடுதியில் திடீரென ஆய்வு மேற்கொண்ட முதல்வர் ஸ்டாலின்

“பொரியல் எதுவும் இல்லையா?” - மாணவர் விடுதியில் திடீரென ஆய்வு மேற்கொண்ட முதல்வர் ஸ்டாலின்

kaleelrahman

பென்னாகரம் மாணவர் விடுதியில் திடீரென ஆய்வு மேற்கொண்ட முதல்வர் ஸ்டாலின், அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்தார்.

தர்மபுரி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்சிகளில் தமிழக முதல்வர் கலந்து கொண்டுள்ளார். காலை அரசு மருத்துவமனையில் புதிய தாய் சேய் தீவிர சிகிச்சை பிரிவை தொடங்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்தின் செயல்பாடுகள் குறித்த யானை பள்ளம் பகுதியில் உள்ள நீர் சுத்திகரிப்பு நிலையம் மற்றும் காவிரி ஆற்றில் உள்ள நீர் உறிஞ்சும் நிலையத்தை ஆய்வு செய்தார்.

இதையடுத்து ஆய்வை முடித்து ஒகேனக்கல்லில் இருந்து தருமபுரி செல்லும் சாலையில், பென்னாகரத்தில் உள்ள அரசு ஆதி திராவிடர் நல மாணவர் விடுதிக்கு திடீரென சென்ற முதல்வர் ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார. அப்போது விடுதியில் வழங்கப்படும் உணவின் தரம் மற்றும் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் சரியாக இருக்கின்றனவா, உணவில் பொரியல் உள்ளிட்டவை இருக்கின்றதா?, முறையாக அரசு வழங்கும் சலுகைகள் கிடைக்கிறதா என்பது குறித்து மாணவர்களிடம் கேட்டறிந்தார்.

இதைத் தொடர்ந்து நன்றாக படித்து, உயர வேண்டும் என மாணவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுரை வழங்கினார். தமிழக முதல்வர் மாணவர் விடுதிக்கு வந்து சென்றதால், மாணவர்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்தனர். முன்னதாக காலையில் ஒகேனக்கல் செல்லும் போது, சாலையோரம் நின்றிருந்த அரசு உதவி பெறும் பள்ளி மாணவிகள் மற்றும் ஆசிரியர்களை சந்தித்து பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.