செய்தியாளர்: சே.விவேகானந்தன்
தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த அஞ்சேஅள்ளி பஞ்சாயத்திற்கு உட்பட்ட நலப்பரம்பட்டி, கெட்டூர், பளிஞ்சரஅள்ளி, ஆதனூர், நல்லாம்பட்டி, வண்ணாத்திப்பட்டி ஆகிய 7 கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களுக்கு அருகில் தருமபுரி - பென்னாகரம் சாலையில் ஆதனூர் அரசு மதுபானக் கடை இருந்துள்ளது. ஆனால், கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்த கடை அகற்றப்பட்டுள்ளது. இதனால் பென்னாகரம் அருகே உள்ள ஜக்கம்பட்டி மது கடைக்கு 20 கிலோமீட்டர் தூரம் செல்ல வேண்டி உள்ளதாக கூறப்படுகிறது.
இதனால், இந்த ஊர் மட்டுமல்லாது அருகில் உள்ள குக்கிரமங்களில் உள்ள மது அருந்துவோர், பென்னாகரம் நோக்கியே செல்ல வேண்டியிருப்பதால், பல்வேறு இடர்பாடுகள் சந்தித்து வருவதாக கூறுகின்றனர்.
மேலும் இரவு நேரங்களில் வாகனங்களில் மதுக் கடைகளுக்குச் செல்லும் பொழுது விபத்துக்கள் ஏற்படுவதாகவும், அதனால் ஆண்கள் வீட்டிற்கு வரும் வரையில் தாங்கள் அச்சம் அடைந்து வருவதாகவும் பெண்கள் கூறுகின்றனர்.
இந்நிலையில், ஆதனூர் கிராமம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமத்தில் அரசு மதுக்கடை வந்தால், ஆண்கள் பாதுகாப்பாக இருப்பார்கள் என்ற கோரிக்கையை முன் வைத்துள்ளனர்.
இந்நிலையில், மதுபானக் கடையை தங்கள் ஊரில் திறக்க வேண்டும் என 100 க்கும் மேற்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர். தங்கள் ஊரில் மதுக்கடை அமைக்கப்பட்டால் ஆண்கள் எந்த வித பாதிப்பும் இல்லாமல் இருப்பார்கள். அதேபோல் தினமும் 500 ரூபாய் சம்பாதித்து, சந்து கடைகளுக்கு சென்று மது அருந்துவதால், அதில் 300 ரூபாய் வரை செலவாகிறது.
இதனால் குடும்ப செலவுகளை செய்வதற்கு வழியில்லாமல் போகிறது.
தங்கள் கிராமத்திலேயே அரசு மதுபானக் கடை திறக்க வேண்டும் என ஆண்களோடு சேர்ந்து பெண்களும் மனு கொடுக்க வந்து சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.