மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனத்தில் பட்டணப்பிரவேசம் நிகழ்வுக்கான பெருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
மயிலாடுதுறையில் 500 ஆண்டுகள் பழைமை வாய்ந்த தருமபுரம் ஆதீனத்திருமடத்தில் உள்ள ஞானாம்பிகை சமேத ஸ்ரீஞானபுரீசுவர சுவாமி கோயில் பெருவிழா இன்று கொடியேற்றத்துடன் துவங்குகிறது. முக்கிய விழாவான 11-ஆம் திருநாளான மே 22-ஆம் தேதி இரவு நடைபெறும் பட்டணப்பிரவேச நிகழ்வில், தருமபுரம் 27-வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் சிவிகைப் பல்லக்கில் எழுந்தருளுகிறார்.
பெருவிழாவையொட்டி மே 18-ஆம் தேதி இரவு 8 மணிக்குமேல் திருக்கல்யாண வைபவமும், ஸ்ரீகுருஞானசம்பந்தர் குருபூஜையும், மே 20-ஆம் தேதி காலை 8 மணிக்குமேல் திருத்தேர் உத்ஸவமும், மே 21-ஆம் தேதி காலை காவிரியில் தீர்த்தவாரியும் நடைபெறுகிறது. தொடர்ந்து, தருமபுரம் ஆதீன குருமுதல்வர் ஸ்ரீகுருஞானசம்பந்தரின் குருமூர்த்திகள் கமலை ஸ்ரீஞானப்பிரகாசர் குருபூஜை நடைபெறவுள்ளது. விழாவையொட்டி காலை 10 மணிக்கு ஸ்ரீசொக்கநாத பெருமான் வழிபாடு நடைபெறுகிறது. பின்னர் நன்பகல் 1 மணிக்கு மாகேஸ்வர பூஜை நடைபெறுகிறது. பின்னர் மாலை 6.30 மணிக்கு குருமூர்தத்தில் எழுந்தருளி தருமபுரம் ஆதீனம் வழிபாடாற்றுகிறார்.
11-ஆம் திருநாளான மே 22-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணிக்கு தருமபுரம் 27-வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் ஸ்ரீசொக்கநாத பெருமான் வழிபாடு செய்து, காலை 10 மணிக்கு ஸ்ரீஞானபுரீசுவரர் கோயிலில் வழிபாடாற்றுகிறார். தொடர்ந்து, மதியம் 12 மணிக்கு மாகேசுவர பூஜை நடைபெறுகிறது. இரவு 10 மணிக்கு நடைபெறும் பட்டணப்பிரவேச நிகழ்வில், தருமபுரம் 27-வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் சிவிகைப் பல்லக்கில் எழுந்தருளி வீதியுலா நடைபெறுகிறது. அதனைத் தொடர்ந்து கொலுக்காட்சி நடைபெறும். இந்த தகவலை ஆதீனப் பொதுமேலாளர் கோதண்டராமன் தெரிவித்துள்ளார்