எஸ்பி அலுவலகத்தில் பெண்கள் புகார் pt desk
தமிழ்நாடு

தருமபுரி: “தீபாவளி சீட்டு நடத்தி லட்சக்கணக்கில் மோசடி” - எஸ்பி அலுவலகத்தில் பெண்கள் புகார்

தருமபுரி அருகே தீபாவளி பண்டிகை சீட்டு நடத்தி 3 ஆண்டுகளில் பல லட்சம் மோசடி செய்தவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி எஸ்பி அலுவலகத்தில் பெண்கள் புகார் அளித்துள்ளனர்.

PT WEB

செய்தியாளர்: சே.விவேகானந்தன்

தருமபுரி நகர கோட்டை பகுதியைச் சேர்ந்த மகேந்திரன் என்பவர், கடந்த 2020 முதல் தீபாவளி பண்டிகை சீட்டு மற்றும் நகை சீட்டு போன்றவற்றை நடத்தி வந்துள்ளார். இதில், கோட்டை பகுதியைச் சேர்ந்த மக்கள் மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் முதல் தீபாவளி பண்டிகை சீட்டு கட்டி வந்துள்ளனர். ஆனால், கடந்த 2021, 22 ஆகிய இரண்டு ஆண்டுகளாக பொருட்களை தராமல் இருந்துள்ளார். இது குறித்து சீட்டு பணம் கட்டியவர்கள் மகேந்திரனிடம் முறையிட்டுள்ளனர். ஆனால் அதற்கு முறையான பதில் அளிக்காமல் இருந்துள்ளார்.

எஸ்பி அலுவலகத்தில் பெண்கள் புகார்

இந்த நிலையில் இந்த ஆண்டு எல்லோருக்கும் பொருட்கள் தருவதாக உறுதி அளித்துள்ளார். ஆனால், தீபாவளி பண்டிகை வந்ததும் பணம் கட்டியவர்களுக்கு பொருட்கள் கொடுக்காததால், தீபாவளிக்கு அடுத்த நாள் பணம் கட்டியவர்கள் மகேந்திரனிடம் கேட்டுள்ளனர். அப்போது மகேந்திரன் மகள் தீபா, மகன் நரேஷ் ஆகியோர் அப்பெண்களை தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கியதாக கூறப்படுகிறது.

இதையடுத்து, “மகேந்திரன் தீபாவளி பண்டிகை சீட்டு நடத்தி 200க்கும் மேற்பட்டவர்களிடம் லட்சக்கணக்கில் பணம் மோசடி செய்துள்ளார். அவர் மீது உரிய நடவடிக்கை எடுத்து பாதிக்கப்பட்ட பெண்களுக்கு பணத்தை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும்” என எஸ்பி அலுவலகத்தில் பாதிக்கப்பட்ட பெண்கள் புகார் கொடுத்தனர். புகாரை பெற்றுக் கொண்ட காவல் துறையினர் உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளனர்.