தமிழ்நாடு

ஏழைகள் வரி விலக்கு கேட்கிறார்களா? - விஜய்யை தொடர்ந்து தனுஷை கண்டித்த நீதிமன்றம்

ஏழைகள் வரி விலக்கு கேட்கிறார்களா? - விஜய்யை தொடர்ந்து தனுஷை கண்டித்த நீதிமன்றம்

PT WEB

ரோல்ஸ்ராய்ஸ் கோஸ்ட் காருக்கு நுழைவு வரி விலக்கு கேட்ட நடிகர் தனுஷுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

கடந்த 2015-ம் ஆண்டு வெளிநாட்டில் இருந்து நடிகர் தனுஷ் இறக்குமதி செய்த சொகுசு காருக்கு 60.66 லட்சம் ரூபாயை நுழைவு வரியாக செலுத்த வணிகவரித்துறை உத்தரவிட்டிருந்தது. நுழைவு வரி வசூலிக்க தடை கோரி தனுஷ் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இதை விசாரித்த உயர்நீதிமன்றம், 50 சதவிகித வரியை செலுத்தும்பட்சத்தில் காரை பதிவு செய்ய வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்திற்கு 2015-ஆம் ஆண்டு நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.

30.33 லட்சம் ரூபாய் வரியை செலுத்தியதாக தனுஷ் தரப்பில் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, விதிகளைப் பின்பற்றி பதிவு செய்ய 2016-ஆம் ஆண்டு ஏப்ரலில் நீதிபதி துரைசாமி உத்தரவிட்டிருந்தார். இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது தனுஷ் தரப்பில் வழக்கறிஞர்கள் எவரும் ஆஜராகாததால் விசாரணை ஆகஸ்ட் 5-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

நுழைவு வரிலிருந்து விலக்கு கேட்டு நடிகர் தனுஷும் வழக்கு தாக்கல் செய்த வழக்கில் இன்று உத்தரவு பிறபிக்கப்படும் என நீதிமன்றம் தெரிவித்த நிலையில், இன்று காலை வழக்கு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம், நுழைவு வரியில் இருந்து விலக்கு கேட்டு வழக்கு தொடர்ந்த பின் தற்போது அதனை வாபஸ் பெற எப்படி அனுமதிக்க முடியும்? என்று நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார்.

நீங்கள் எவ்வளவு கார் வேண்டுமானாலும் வாங்குங்கள்; ஆனால், செலுத்தும் தொகையை முழுமையாக செலுத்துங்கள்  பால்காரர் உள்ளிட்ட ஏழைகள் கூட பெட்ரோலுக்கு வரி செலுத்தும்போது, அதனை செலுத்த முடியவில்லை என அவர்கள் நீதிமன்றத்தை நாடுகிறார்களா? என்று கண்டனம் தெரிவித்தார். மேலும் வழக்கு விசாரணையை இன்று மதியம் ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளார்.

முன்னதாக, இதே போல் வெளிநாட்டு இறக்குமதி காருக்கு நுழைவு வரியிலிருந்து விலக்கு கேட்ட நடிகர் விஜய்யை விமர்சித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், 1 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்திருந்தார். இதுதொடர்பான விஜய்யின் மேல்முறையீட்டை விசாரித்த 2 நீதிபதிகள் கொண்ட அமர்வு, ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்திருக்கிறது.