தமிழ்நாடு

“மறைந்த சிறப்பு எஸ்.ஐ பூமிநாதன் விவேகமிக்கவர்; அவருக்கு வீரவணக்கம்” - டிஜிபி சைலேந்திரபாபு

“மறைந்த சிறப்பு எஸ்.ஐ பூமிநாதன் விவேகமிக்கவர்; அவருக்கு வீரவணக்கம்” - டிஜிபி சைலேந்திரபாபு

Sinekadhara

திருச்சி நவல்பட்டு காவல்நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் பூமிநாதன் ஆடு திருடும் கும்பலால் கொலை செய்யப்பட்டார். இந்நிலையில் தமிழக டிஜிபி சைலேந்திரபாபு மறைந்த சிறப்பு எஸ்.ஐ பூமிநாதனின் வீட்டிற்கு சென்று அவரது உருவப்படத்திற்கு அஞ்சலி செலுத்தி அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், ’’எஸ்.எஸ்.ஐ பூமிநாதனுக்கு காவல்துறை வீரவணக்கம் செலுத்துகிறது. அவருடைய இழப்பு பெரிய இழப்பு. ஏற்கெனவே முதல்வரிடன் விருது வாங்கியவர். தீவிரவாத தடுப்பு பயிற்சி பெற்றவர். கடமையுணர்வோடும், வீரத்தோடும் விவேகத்தோடும் பணியாற்றியவர். ஆடு திருட்டு தானே என்று நினைக்காமல், 3 பேரையும் 15 கி.மீ தூரம் விரட்டிச்சென்று பிடித்ததோடு, ஆயுதங்களை பறிமுதல் செய்து பாதுகாப்பாகவும் இருந்துள்ளார். மேலும் முக்கிய குற்றவாளியின் தாயாரையும் செல்போனில் அழைத்து இதுபற்றி கூறியிருக்கிறார். சிறுவர்கள் திடீரென்று தாக்குதல் நடத்துவார்கள் என்று எதிர்பார்த்திருக்க மாட்டார்.

பூமிநாதன் வீரமரணத்தின் மூலம், தமிழ்நாடு காவல்துறை கடமைமிக்க, வீரமிக்க, விவேகமிக்க, சிறுவர்களிடம் அன்பாக நடந்துகொள்ளும் காவல்துறை என்பதை நிரூபித்துள்ளார். அவரை இழந்து வாடும் குடும்பத்திற்கு முதலமைச்சர் நிவாரண நிதியிலிருந்து ரூ.1 கோடி நிதியுதவி அறிவித்து, வாரிசுக்கு வேலையும் தருவதற்கு உத்தரவு பிறப்பித்திருக்கிறார். முதல்வருக்கு தமிழ்நாடு காவல்துறை சார்பாக நன்றி தெரிவித்துக்கொள்கிறோம். ரோந்து பணிக்கு செல்லும்போது துப்பாக்கியுடன் செல்ல அறிவுறுத்தியுள்ளோம். தேவைப்பட்டால் தற்காப்புக்காக துப்பாக்கியை பயன்படுத்தலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது’’ என்று கூறினார்.