அனைத்து ஆணையர்கள் மற்றும் உயர்மட்ட காவல்துறை அதிகாரிகளும் பணிக்கு திரும்ப டிஜிபி ராஜேந்திரன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
திமுக தலைவர் கருணாநிதிக்கு காவேரி மருத்துவமனையில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கருணாநிதியின் உடல்நலம் குறித்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் மருத்துவமனைக்கு சென்று விசாரித்து வருகின்றனர். அவரது உடல்நிலையில் நேற்று முதல் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இதனால் காவேரி மருத்துவமனை முன்பு ஏராளமான திமுக தொண்டர்கள் குவிந்துள்ளனர். அத்துடன் பாதுகாப்பு பணிக்காக 300க்கும் மேற்பட்ட காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
இதுதவிர சென்னை முக்கிய இடங்களிலும், தமிழகம் முழுவதும் முக்கிய இடங்களிலும் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதற்கிடையே திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், முதலமைச்சர் பழனிசாமியை சந்தித்து ஆலோசனை நடத்தினார். இந்நிலையில் அனைத்து ஆணையர்கள், மண்டல காவல்துறை தலைவர்கள், துணைத்தலைவர்கள் எஸ்பிக்கள் பணிக்கு திரும்ப டிஜிபி ராஜேந்திரன் உத்தரவு பிறப்பித்துள்ளார். அத்துடன் பாதுகாப்புப் பணிக்காக தேவையான காவலர்களை பயன்படுத்திக்கொள்ளவும் அவர் அனுமதி வழங்கியுள்ளார்.