DMK இளைஞரணி PT WEP
தமிழ்நாடு

தமிழக அரசியல் கட்சிகளின் இளைஞரணி அமைப்புகளின் வளர்ச்சியும், வீழ்ச்சியும் - பின்னணி என்ன?

தமிழகத்தில் உள்ள பல்வேறு அரசியல் கட்சிகளும் "இளைஞரணி" என்ற அமைப்பை உருவாக்கிச் செயல்படுத்தி வருகின்றனர். அதனுடைய வளர்ச்சியும், தற்போதைய நிலை குறித்து விவரிக்கும் செய்தி தொகுப்பு.

webteam

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கான பிரசாரத்தை தொடங்கும் வகையில், சேலத்தில் இளைஞரணி மாநாட்டை நடத்தியுள்ளது திமுக. ஒவ்வொரு கட்சியையும் உயிர்ப்புடன் வைத்துக்கொள்ள நலத்திட்ட உதவிகள், போராட்டம் போன்றவை எந்த அளவுக்கு முக்கியமானதோ, அதே அளவுக்கு இளைஞரணி எனும் கட்டமைப்பும் அவசியமானது. அப்படி, தமிழ்நாட்டில் இருக்கும் பிரதான அரசியல் கட்சிகளின் இளைஞரணிகள், அவை தொடங்கப்பட்ட ஆண்டு, அணியை தற்போது வழிநடத்தும் தளபதி உள்ளிட்ட தகவல்களை அலசும் சிறு முயற்சியே இந்த கட்டுரையின் நோக்கம்.

திமுக

1949ம் ஆண்டு அண்ணாவால் தொடங்கப்பட்ட திமுகவுக்கு இளைஞரணியானது 1980 ஜூலை 20ம் தேதி மதுரையில் வைத்து தொடங்கப்பட்டது. அணியின் முதல் அமைப்பாளராக மு.க.ஸ்டாலின் நியமிக்கப்பட்டார். அமைப்பு தொடங்கப்பட்டு 27 ஆண்டுகளுக்குப் பிறகு 2007ம் ஆண்டு இளைஞரணியின் முதல் மாநாடு 2 நாட்களுக்கு நடத்தப்பட்டது. தற்போது இளைஞரணி செயலாளராக இருக்கும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் இரண்டாவது மாநாடு சேலத்தில் நடக்கிறது.

அதிமுக

திமுகவில் இருந்து வெளியேறி 1972ல் அதிமுக எனும் தனிக்கட்சியை தொடங்கினார் எம்.ஜி.ஆர். அவர் முதல்வராக இருந்து மறைந்தபோதும் சரி, ஜெயலலிதா 2 முறை முதல்வரானபோதும் சரி அதிமுகவுக்கு என இளைஞர் அணி என்ற ஒன்று கிடையாது. 2006ல் சட்டமன்ற தேர்தலில் தோல்வியை சந்தித்த பிறகே, 2008ம் ஆண்டு மார்ச் 7ம் தேதி அதிமுகவில் இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை தோற்றுவிக்கப்பட்டது. அப்போது சசிகலாவின் மூத்த அண்ணன் மகன் மருத்துவர் வெங்கடேஷ் பாசறையின் செயலாளராக இருந்தார். தொடர்ந்து பல கைகளுக்கு மாறிய அந்த பொறுப்பு தற்போது மருத்துவர் வி.பி.பி.பரமசிவம் கைகளில் இருக்கிறது.

காங்கிரஸ்

நாட்டின் முன்னோடியாகவும் மூத்த கட்சியாக இருந்து வரும் காங்கிரஸ் கட்சிக்கு 63 ஆண்டுகளுக்கு முன்பு ஆகஸ்ட் 9, 1960ம் ஆண்டு இளைஞர் அணி தொடங்கப்பட்டது. தேசிய அளவில் கட்சியின் இளைஞரணி தலைவராக ஸ்ரீனிவாஸ் இருந்து வருகிறார். தமிழக காங்கிரஸ் கமிட்டியின் இளைஞர் அணி தலைவராக தற்போது லெனின் பிரசாத் இருந்து வருகிறார்.

பாஜக

ஆளும் கட்சியான பாஜகவுக்கு இளைஞர் அணி 1978ம் ஆண்டு தொடங்கப்பட்டது. கட்சி 1980 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட நிலையில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இளைஞர் அணி தொடங்கப்பட்டது. தற்போது அமைப்பின் தேசிய தலைவராக இருந்து வரும் நட்டா, ஒரு காலத்தில் இளைஞரணிக்கும் தேசிய தலைவராக இருந்துள்ளார். தற்போது இளைஞர் அணியின் தேசிய தலைவராக தேஜஸ்வி சூர்யா இருக்கும் நிலையில், மாநில தலைவராக வினோஜ்.பி.செல்வம் இருந்து வருகிறார்.

பாமக

1989ம் ஆண்டு தொடங்கப்பட்ட பாமகவுக்கு இளைஞரணியும் அப்போதே தொடங்கப்பட்டது. அந்த அணியின் தலைவராக இருந்த அன்புமணி ராமதாஸ், கட்சியின் தலைவர் பொறுப்பை கடந்த 2022ம் ஆண்டு ஏற்றார். அதற்கு பிறகு இளைஞர் அணியின் நியமனத்தலைவராக பாமகவின் முன்னாள் தலைவர் ஜி,கே மணியின் மகன் தமிழ்க்குமரன் நியமிக்கப்பட்டார். தொடர்ந்து ஒரு சில மாதங்களிலேயே அவர் பதவியில் இருந்து விலகிவிட்டதால், இளைஞர் அணி தலைவர் பதவி காலியாக இருக்கிறது.

தேமுதிக

2005ம் ஆண்டு விஜயகாந்தால் உருவாக்கப்பட்ட தேமுதிகவுக்கு இளைஞர் அணியும் அப்போதே தொடங்கப்பட்டுவிட்டது. இளைஞர் அணியின் செயலாளராக சுதீஷ் இருந்து வந்த நிலையில், தற்போது விஜயகாந்தின் மூத்த மகன் விஜயபிரபாகரன் இளைஞரணி செயலாளராக இருந்து வருகிறார். விஜயகாந்த் இறப்பைத் தொடர்ந்து, இனி ஆக்டிவ் பாலிடிக்ஸில் இறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நாம் தமிழர்

சீமானால் 2009ம் ஆண்டு இயக்கமாக தொடங்கப்பட்ட நாம் தமிழர், அடுத்த ஆண்டு நாம் தமிழர் கட்சியானது. இளைஞர் பாசறை, மாணவர் பாசறை உள்ளிட்ட பல்வேறு பாசறைகளைக் கொண்டுள்ள நாம் தமிழர் கட்சியின் இளைஞரணி பாசறை செயலாளராக இடும்பாவனம் கார்த்திக் இருந்து வருகிறார்.

DYFI

தெருமுனை பிரச்னை தொடங்கி தேச பிரச்னை வரை மக்களின் பிரச்னைகளுக்காக குரல் கொடுத்து வரும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம்(DYFI) 1980 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. 15 முதல் 40 வயது வரை உடையவர்கள் யாராக இருந்தாலும் இதில் உறுப்பினர் ஆகலாம். சங்கத்தின் தலைவராக A. A. Rahim இருந்து வருகிறார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அமைப்பாக DYFI செயல்பட்டு வருகிறது

SFI

இந்திய மாணவர் சங்கம் (SFI) கடந்த 1970ம் ஆண்டு தொடங்கப்பட்டது. சுதந்திரம், ஜனநாயகம், சோசலிசம்" ஆகிய முழக்கங்களோடு செயல்பட்டு வரும் இந்த அமைப்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாணவர் அணியாக இருந்து வருகிறது. இதன் தலைவராக வி.பி சானு இருக்கும் நிலையில் பொதுச்செயலாளராக மயூக் பிஸ்வாஸ் இருந்து வருகிறார்.

மதிமுக

திமுகவில் இருந்து விலகிய வைகோ 1994 ஆம் ஆண்டு மதிமுகவை தொடங்கினார். மாணவர்களுக்கு இளைஞரணிப்பு என்று பல்வேறு அமைப்புகள் இருக்கும் நிலையில் இளைஞர் அமைப்பின் செயலாளராக ஆசைத்தம்பி இருந்து வருகிறார்.‌