Armstrong, Thiruvenkadam pt desk
தமிழ்நாடு

4 நாட்களில் 2 என்கவுன்டர்கள்: காவல்துறையின் துப்பாக்கித் தோட்டாக்களுக்கு இரையான திருவேங்கடம் யார்?

தமிழ்நாட்டில் 4 நாள்களில் 2 என்கவுன்டர் சம்பவங்கள் நடந்துள்ளன. தற்போது காவல்துறையின் துப்பாக்கி வைத்த குறி, ரவுடி திருவேங்கடத்தை நோக்கி. யார் இந்த திருவேங்கடம்? பின்னணியை பார்க்கலாம்...

webteam

செய்தியாளர்: அன்பரசன், ரவிக்குமார்

‘உணவு டெலிவரி செய்வதாகக் கூறி வந்தவர்கள்தான், பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங்கை வெட்டிப் படுகொலை செய்தார்கள்’ - இந்த ஒரு தகவல்தான், பதபதைப்பை முதலில் விதைத்தது.

இந்தப் படுகொலையை நிகழ்த்துவதற்காக, சில மணி நேரங்களுக்கு முன்பிருந்து அந்தப் பகுதியை சுற்றிச் சுற்றி வந்து, நோட்டமிட்டது கொலை கும்பல். இதுகுறித்து சிசிடிவி காட்சிகளை நேற்று வெளியிட்டுள்ளது சென்னை காவல்துறை.

அந்த சிசிடிவி காட்சியின்படி, முக்கிய குற்றவாளியாக இருப்பவர் திருவேங்கடம். இவரை, நேற்று காலை என்கவுண்ட்டர் செய்துள்ளது காவல்துறை. யார் இந்த திருவேங்கடம்? பார்ப்போம்...

யார் இந்த திருவேங்கடம்?

கடந்த ஆண்டு பட்டினப்பாக்கத்தில் ரவுடி ஆற்காடு சுரேஷ் கொலை செய்யப்பட, இதற்கு பழி தீர்ப்பதற்காக கடந்த 5 ஆம் தேதி, தனது வீட்டின் அருகிலேயே வெட்டிக் கொல்லப்பட்டார் ஆம்ஸ்ட்ராங்.

ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு, ராமு, திரவேங்கடம் உள்பட 11 பேரை கைது செய்தது தனிப்படை. ஒரு தேசியக் கட்சியின் மாநிலத் தலைவர் படுகொலை செய்யப்பட்டதால், தொற்றிக் கொண்டது பதற்றம். கைது செய்யப்பட்ட 11 பேரையும், கடந்த 11 ஆம் தேதி ஐந்து நாட்கள் காவலில் எடுத்து, பரங்கிமலை ஆயுதப்படை வளாகத்தில் வைத்து விசாரித்தது காவல்துறை. ஆம்ஸ்ட்ராங் கொலையின் பின்னணி, ஸ்கெட்ச் போட்டது எப்படி என்பன உள்ளிட்ட பல கோணங்களில் விரிந்தது விசாரணை.

ஆம்ஸ்ட்ராங் படுகொலை

வழக்கில் மூன்றாவது குற்றவாளியாக காவல்துறை ஆவணங்களில் பதிவாகியுள்ள திருவேங்கடம், மாதவரம் அருகே ஆயுதங்களை பதுக்கி வைத்திருப்பதாக தெரியவந்தது. அங்கு சோதனையிட்டு, ஆயுதங்களை பறிமுதல் செய்ய, கொடுங்கையூர் காவல் ஆய்வாளர் சரவணன், தனிப்படை ஆய்வாளர் முகமது புகாரி தலைமையில், திருவேங்கடத்துடன் மாதவரம் புறப்பட்டது ஒரு குழு. அப்போது ஆடு தொட்டி என்ற இடத்தில் திருவேங்கடம் தப்பிவிட்டதாக கூறுகிறது காவல்துறை.

அவர், புழல் அருகே வெஜிடேரியன் வில்லேஜ் என்ற இடத்தில், தகரக் குடிசையில் பதுங்கியிருந்ததை கண்டுபிடித்து சுற்றி வளைத்துள்ளது தனிப்படை கைது செய்ய முற்பட்டபோது, அங்கு ஏற்கனவே பதுக்கி வைத்திருந்த துப்பாக்கியால், ஆய்வாளர் சரவணனை நோக்கி சுட்டுள்ளார் திருவேங்கடம். தற்காப்புக்காக திருவேங்கடத்தின் வயிற்றின் வலதுபுறம், இடது மார்பு என 2 ரவுண்டு சுட்டுள்ளார் ஆய்வாளர் முகமது புகாரி. தோட்டா பாய்ந்த நிலையில், மாதவரம் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது, அவர் உயிரிழந்து விட்டதாக, மருத்துவர்கள் கூறியதாகக் கூறுகிறது காவல்துறை.

Armstrong murder case

காவல்துறையின் துப்பாக்கிக்கு இரையான 33 வயதான திருவேங்கடம், குன்றத்தூர் - பெரியார் நகர், காமராஜர் தெருவைச் சேர்ந்தவர். இவர் மீது ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு மட்டுமல்ல, 2015 ல் பகுஜன் சமாஜ் கட்சியின் மாவட்டச் செயலாளர் தென்னரசு கொலை வழக்கு உள்பட மேலும் 3 கொலை வழக்குகள் உள்ளன. இவைதவிர, பத்துக்கும் அதிகமான வழக்குகள் நிலுவையில் உள்ளன. ஆம்ஸ்ட்ராங் படுகொலையை செய்து முடிக்க ப்ளான் போட்டு, ஸ்கெட்ச் போட்டுக் கொடுத்ததும், அதற்காக ஆயுதங்களை சப்ளை செய்த வெப்பன் சப்ளையரும் திருவேங்கடம்தான்.

குறிவைத்த ஒருவரை கொலை செய்வதற்காக, சம்பந்தப்பட்டவரை பின்தொடர்வது, எந்த இடத்தில் கொலையை அரங்கேற்றுவது என திட்டமிட்டு, ஸ்கெட்ச் போடுவதில் வல்லவராம் இந்த திருவேங்கடம்.

முக்கியமாக, ஆம்ஸ்ட்ராங் தனது வீட்டின் அருகே நின்று கொண்டிருந்தபோது, முதல் ஆளாக பின்புறமாக வெட்டி, நிலைகுலைய வைத்திருக்கிறார் திருவேங்கடம். திருவேங்கடம் சுடப்பட்ட தகரக் குடிசையில்தான், ஆம்ஸ்ட்ராங் - தென்னரசு உள்ளிட்டோரை கொல்வதற்கான சதித் திட்டத்தை தீட்டியுள்ளது கொலை கும்பல்... அந்தக் குடிசையில்தான் ஆயுதங்களையும் பதுக்கி வைத்துள்ளது. திருவேங்கடம் என்கவுண்டர் தொடர்பாக, ஆயுதம் வைத்திருத்தல், தாக்க முற்படுதல், ஆபாசமாக பேசுதல் உள்பட 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளது புழல் காவல்துறை.

ஆற்காடு சுரேஷ், பொன்னை பாலா, ஆம்ஸ்ட்ராங்

கடந்த வியாழனன்று, புதுக்கோட்டையில் ரவுடி துரைசாமி என்கவுன்ட்டர் செய்யப்பட்ட நிலையில், சென்னையில் போலீஸ் காவலில் இருந்த ரவுடி திருவேங்கடம் என்கவுன்டர் செய்யப்பட்டுள்ளார். தமிழ்நாட்டில் 4 நாள்களில் 2 என்கவுன்ட்டர் என்பது, பொதுமக்களிடையே பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.