ஸ்ரீபெரும்புதூர் மக்களவைத் தொகுதி முகநூல்
தமிழ்நாடு

ELECTION 2024 | தொகுதி அலசல் | ஸ்ரீபெரும்புதூர் மக்களவைத் தொகுதி - முழு விவரம்!

தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தமிழகத்தில் உள்ள மக்களவைத் தொகுதிகள் குறித்த விவரங்களைப் பார்த்து வருகிறோம். அந்த வகையில் ஸ்ரீபெரும்புதூர் மக்களவைத் தொகுதி குறித்த விவரங்களைப் பார்க்கலாம்.

PT WEB

1962 ஆம் ஆண்டு முதல் தேர்தலைச் சந்தித்து வருகிறது ஸ்ரீபெரும்புதூர் மக்களவைத் தொகுதி. 2008 ஆம் ஆண்டு மறுசீரமைப்பு நடவடிக்கைக்குப் பின் ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் மதுரவாயல், அம்பத்தூர், ஆலந்தூர், ஸ்ரீபெரும்புதூர், பல்லாவரம், தாம்பரம் ஆகிய ஆறு சட்டப்பேரவை தொகுதிகள் சேர்க்கப்பட்டன.

மதுரவாயல், அம்பத்தூர், ஆலந்தூர் ஆகிய மூன்றும் சென்னை மாவட்டத்திலும், பல்லாவரம், தாம்பரம் செங்கல்பட்டு மாவட்டத்திலும் ஸ்ரீபெரும்புதூர் காஞ்சிபுரம் மாவட்டத்திலும் அமைந்துள்ளன.

இத்தொகுதியில் திமுக 9 முறை வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் கட்சியும், அதிமுகவும் தலா 3 முறை வெற்றி பெற்றுள்ளன. காங்கிரஸ் கட்சியின் மரகதம் சந்திரசேகர் தொடர்ந்து இந்தத் தொகுதியில் மூன்று முறை வெற்றி பெற்றுள்ளார். கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் திமுக சார்பில் களம் கண்ட முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர். பாலு 5 லட்சத்திற்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். மொத்தம் 7 லட்சத்து 93 ஆயிரத்து 281 வாக்குகளைப் பெற்றிருந்தார் அவர்.

TR Baalu

அவரை எதிர்த்து அதிமுக கூட்டணியில் போட்டியிட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் வைத்திலிங்கம் 2 லட்சத்து 85 ஆயிரத்து 326 வாக்குகளைப் பெற்றார். மக்கள் நீதி மய்யத்தின் ஸ்ரீதர் ஒரு லட்சத்து 35 ஆயிரத்து 525 வாக்குகளையும், நாம் தமிழர் கட்சியின் மகேந்திரன் 84 ஆயிரத்து 979 வாக்குகளையும் பெற்றனர்.