திண்டுக்கல் மக்களவை தொகுதி  முகநூல்
தமிழ்நாடு

ELECTION 2024 | தொகுதி அலசல் | திண்டுக்கல் மக்களவை தொகுதியின் சுவாரஸ்ய பின்னணி

சுவாரசிய பின்னணி கொண்ட திண்டுக்கல் மக்களவை தொகுதி குறித்த அடிப்படைத் தகவல்கள் சிலவற்றைப் பார்க்கலாம்.

PT WEB

தமிழக அரசியல் களத்தில் அதிமுகவிற்கு முதல் வெற்றியைத் தந்த தொகுதி திண்டுக்கல் மக்களவைத் தொகுதி. கடந்த தேர்தலில் தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளருக்கு வெற்றியை தந்ததும் திண்டுக்கல் தொகுதிதான். சுவாரசிய பின்னணி கொண்ட இத்தொகுதி குறித்த அடிப்படைத் தகவல்கள் சிலவற்றைப் பார்க்கலாம்.

திண்டுக்கல் மக்களவைத் தொகுதி திண்டுக்கல், நத்தம், பழனி, நிலக்கோட்டை, ஒட்டன்சத்திரம், ஆத்தூர் ஆகிய ஆறு தொகுதிகளை உள்ளடக்கியதாகும். தொகுதி மறுசீரமைப்பிற்கு முன்னர் இத்தொகுதியோடு திருமங்கலம், உசிலம்பட்டி, சோழவந்தான் சட்டமன்றத் தொகுதிகள் இணைந்திருந்தன.

1973ஆம் ஆண்டு இத்தொகுதியில் நடந்த இடைத்தேர்தலில்தான் எம்.ஜி.ஆரால் தோற்றுவிக்கப்பட்ட அதிமுக வேட்பாளர் மாயத்தேவர் வெற்றி பெற்றார். திண்டுக்கல் மக்களவைத் தொகுதியில் அதிக முறை வெற்றி பெற்ற கட்சியும் அதிமுகவே. அக்கட்சி 8 முறை இத்தொகுதியில் வெற்றி பெற்றுள்ளது. இதற்கு அடுத்தபடியாக காங்கிரஸ் கட்சி 5 முறையும், திமுக நான்கு முறையும், தமிழ் மாநில காங்கிரஸ் ஒரு முறையும் இத்தொகுதியில் வெற்றி பெற்றுள்ளன.

அதிமுகவின் திண்டுக்கல் சீனிவாசன் அதிகபட்சமாக நான்கு முறை இத்தொகுதியில் இருந்து மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அதற்கு அடுத்தபடியாக மாயத்தேவர் மற்றும் என்எஸ்வி சித்தன் ஆகியோர் தலா மூன்று முறை இத்தொகுதியில் வெற்றி பெற்றுள்ளனர்.

கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் திமுக வேட்பாளர் வேலுச்சாமி வெற்றி பெற்றார். அவர் 7,46,523 வாக்குகளும், பாட்டாளி மக்கள் கட்சியின் ஜோதிமுத்து 2,7,551 வாக்குகளையும் பெற்றனர். இத்தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிட்ட நடிகர் மன்சூர் அலிகான் 54,957 வாக்குகளுடன் நான்காம் இடம் பெற்றார். திமுகவின் வேலுச்சாமி சுமார் 5,39,000 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றதே கடந்த தேர்தலில் தமிழகத்தில் வேட்பாளர் ஒருவரின் மிகப்பெரிய வெற்றியாக அமைந்தது