நேற்றைய தினம் பிற்பகல் நேரத்தில் சென்னையில் திடீரென மழை பெய்யத் தொடங்கியது. தொடர்ந்து மழை இரவு வரையிலும், பின் நள்ளிரவு முழுவதும் விட்டு விட்டு நீடித்து வந்தது. சென்னை மட்டுமன்றி காஞ்சிபுரம், திருவள்ளூர் பகுதிகளிலும் பல மணி நேரங்களாக மழை பெய்துவந்தது. சென்னையை பொறுத்தவரை குறிப்பாக தி நகர், ஈக்காட்டுதாங்கல், வடபழனி, கோடம்பாக்கம் ,கோயம்பேடு, வளசரவாக்கம், அசோக் நகர், மீனம்பாக்கம், நுங்கம்பாக்கம் என சென்னை முழுவதும் உள்ள இடங்களிலும், புறநகர் பகுதிகளிலும் கனமழை பெய்து வந்தது. பல இடங்களில் கனமழை பதிவான நிலையில் சில இடங்களில் அதிகனமழையும் பெய்துள்ளது.
இந்நிலையில் ஒவ்வொரு பகுதியிலும் எவ்வளவு மழை பதிவாகியுள்ளது என்பது குறித்த விவரங்கள் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி, இன்று காலை நிலவரப்படி அதிகபட்சமாக சென்னை டிஜிபி அலுவலகத்தில் (மெரினா) 24 செ.மீ மழை பதிவாகியுள்ளது. அதற்கு அடுத்தப்படியாக திருவள்ளூர் மாவட்டம் ஆவடியில் 23 செ.மீ. மழை, நுங்கம்பாக்கத்தில் 21 செ.மீ., எம்.ஜி.ஆர். நகரில் 19.7 செ.மீ, சென்னை ஆட்சியர் அலுவலகத்தில் 19.8 செ.மீ., அம்பத்தூரில் 19.6 செ.மீ பதிவாகியுள்ளது. போலவே செம்பரம்பாக்கத்தில் 19 செ.மீ, அண்ணா பல்கலைக்கழகத்தில் 18.9 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது.
சென்னையில் மொத்தம் 2 இடங்களில் (டி.ஜி.பி. அலுவலகம், நுங்கம்பாக்கம்) அதிகனமழையும்; 6 இடங்களில் (எம்.ஜி.ஆர். நகர், ஆட்சியர் அலுவலகம், அம்பத்தூர், தண்டையார்பேட்டை, அண்ணா பல்கலைக்கழகம், ஐயனவரம்) மிக கனமழையும் பதிவாகியுள்ளது.
இதேபோல செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கத்தில் 9.4 செ.மீ அளவுக்கு மழை பெய்துள்ளது. தாம்பரத்தில் 7 செ.மீ, திருப்போரூரில் 4.2 செ.மீ, மாமல்லபுரத்தில் 4 செ.மீ அளவுக்கு மழை பெய்துள்ளது.
சமீபத்திய செய்தி: சென்னை மழை: நள்ளிரவில் வெள்ளம் பாதித்த இடங்களில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு