minister PTR pt desk
தமிழ்நாடு

அமைச்சரவை மாற்றத்துக்கு அண்ணாமலை வெளியிட்ட ஆடியோ தான் காரணமா? விரிவான அரசியல் பார்வை!

தமிழ்நாட்டில் பல நாட்களாக பேசப்பட்டு வந்த அமைச்சரவை மாற்றம், நேற்று நடைபெற்றுள்ளது. நான்கு அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றப்பட்டுள்ளது. இது குறித்து புதிய தலைமுறை நேர்படப் பேசு நிகழ்ச்சியல் நடைபெற்ற காரசார விவாதத்தை இங்கு விரிவாக பார்க்கலாம்.

Kaleel Rahman

“உண்மை உடனுக்குடன்” என்ற நோக்குடன் நடப்பு செய்திகளை நடுநிலையோடு விரைந்து தரும் தமிழகத்தின் முன்னணி செய்தித் தொலைக்காட்சியான “புதிய தலைமுறை”யின் டிஜிட்டல் கட்டுரைகளை ஆண்ட்ராய்டு செயலியில் பெற https://bit.ly/PTAnApp - பதிவிறக்கம் செய்க!

IOS செயலியை அப்டேட் செய்து கொள்ள https://bit.ly/PTIOSnew

அமைச்சரவை மாற்றம் என்பது எதார்த்தமாக நடைபெறும் ஒரு விஷயம்தான். நிர்வாகத்தை சீர்தூக்கிப் பார்ப்பதற்கான ஒரு முயற்சி அது. அதேபோல் சில நேரத்தில் சிறப்பாக பணியாற்றுகின்ற அமைச்சர்களுக்கு கூடுதல் பொறுப்பு அங்கு வழங்கப்படும். போலவே சரிவர செயல்படாத அமைச்சர்களை மாற்றுவது என்பது தான் அமைச்சரவை மாற்றங்களின் நோக்கமாக இருக்கக்கூடும்.

தற்போது நடந்திருக்கின்ற தமிழக அமைச்சரவை மாற்றத்திலும் அப்படி சிறப்பாக பணியாற்றிய அமைச்சர்களுக்கு கூடுதல் பொறுப்பு கொடுக்கப்பட்டுள்ளதா, சிறப்பாக செயல்படாத அமைச்சர்கள் மாற்றப்பட்டிருக்கிறார்களா, அல்லது வேறு ஏதேனும் அரசியல் காரணங்கள் இருக்கிறதா என்பதையெல்லாம் இந்த தொகுப்பில் காணலாம்...

அரசியல் அழுத்தங்கள் காரணமாக அமைச்சரவை மாற்றம் செய்யப்பட்டதா?

பதிலளிக்கிறார் பத்திரிகையாளர் லட்சுமி சுப்ரமணியன்...

“ஒரே வரியில சொல்லணும்னா இந்த அமைச்சரவை மாற்றம் தேவையில்லை என்றே நினைக்கிறேன். ஏனென்றால் இந்த அரசு பொறுப்பேற்ற போது தமிழகத்தின் நிதி நிலைமை எப்படி இருக்கிறது என்ற விளக்கம் அப்பவே கொடுக்கப்பட்டது. இதை சரிசெய்ய திறமைவாய்ந்தவாராக பிடிஆர் பார்க்கப்பட்டார். அதனால்தான் அந்த பொறுப்பு அவருக்கு கொடுக்கப்பட்டது. அதற்கேற்றார் போல், சிறப்பாக பணியாற்றிய பிடிஆர் அந்த பொறுப்பில் இருந்து மாற்றப்பட்டுள்ளார்.

Governor

இதற்கு அண்ணாமலை வெளியிட்ட ஆடியோதான் காரணம் என சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஒருவேளை இதுக்கு ஆடியோதான் காரணமென்றால் இந்த அரசாங்கமே முன்வந்து ‘பிடிஆர் செய்தது குற்றம். அந்த குற்றத்துக்காக அவருக்கு இந்த தண்டணையை கொடுக்குறோம்’ என்று ஒத்துக் கொள்வதாக புரிந்துகொள்ள முடிகிறது. மிகவும் சிறப்பாக செயல்பட்டு வந்த நிதித்துறை மற்றும் தொழில்துறை அமைச்சர்களை ஏன் மாற்ற வேண்டும் என்ற கேள்வி எழுகிறது.

சிறப்பாக பணியாற்றிய தங்கம் தென்னரசுவிடம் இருந்த தொழில் துறையை ஏன் புதிதாக பொறுப்பேற்கும் ஒரு அமைச்சரிடம் கொடுக்க வேண்டும்? திமுக அரசு மீது கடுமையான அதிருப்தி இருக்கு. இல்லை என்ற சொல்ல முடியாது. ஆகவே அரசு செய்த சில தவறுகளை திருத்திக் கொள்ளும் விதமாகதான் இந்த அமைச்சரவை மாற்றம் தெரிகிறது”

சிறப்பாக செயல்பட்ட இரண்டு துறைகளை மாற்ற வேண்டிய காரணமென்ன?

பதிலளிக்கிறார் திமுக ஆதரவாளர் மதுரை பாலா...

“அமைச்சரவை மாற்றம் என்பது ஒவ்வொரு அமைச்சர்களின் செயல்பாடுகளின் அடிப்படையில் அவர்களுக்கு வாய்ப்பளிக்கும் விதமாகதான் செய்யப்பட்டுள்ளது. அண்ணாமலை வெளியிட்ட ஆடியோதான் அமைச்சரவை மாற்றத்துக்கு காரணம் என்பதை திராவிட மாடல் ஆட்சியில் ஒத்துக் கொள்ளவே முடியாது.

cm stalin

கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் எப்படி எப்படியெல்லாம் அமைச்சரவை மாற்றம் நிகழ்ந்தது என்று நம் எல்லோருக்கும் தெரியும். எடப்பாடி பழனிசாமி ஆட்சி காலத்தில் அமைச்சரவை மாற்றம் நடைபெறவில்லை. ஏனென்றால், எடப்பாடி பழனிசாமிக்கு அதற்கான திறனோ ஆளுமையோ கிடையாது. ஏனென்றால் அவர் மக்கள் செல்வாக்கால் தேர்ந்தெடுக்கப்பட்டு முதல்வராக வரவில்லை.

கடந்த பத்தாண்டு காலம் அதிமுக அரசு நிதியை மோசமாக கையாண்டதால் அதை சீர்செய்ய பிடிஆரிடம் நிதி மேலாண்மை கொடுக்கப்பட்டது. அதில், அவர் சிறப்பாக பணியாற்றினார். அவருடைய சேவை தகவல் தொழில்நுட்பத் துறைக்கு தேவை என்பதால் அவருடைய துறை மாற்றப்பட்டுள்ளது. அவருடைய துறை மாற்றத்திற்கு அண்ணாமலை வெளியிட்ட ஆடியோ காரணமல்ல.

ஜெயலலிதா அமைச்சரவை பலமுறை மாற்றப்பட்டுள்ளது. இப்போது நடைபெற்றுள்ள அமைச்சரவை மாற்றத்துக்கு அதிமுக உள்நோக்கம் கற்பிக்க வேண்டிய காரணமென்ன?

பதிலளிக்கிறார் அதிமுக ஆதரவாளர் பொங்கலூர் மணிகண்டன்.

“அதிமுக அமைச்சர்களோடு திமுக அமைச்சர்களை நிச்சயமாக ஒப்பிடக் கூடாது. அதிமுக அமைச்சரவையில் இருந்தவர்கள் எல்லோருமே எளியவர்கள், புதியவர்கள், நிர்வாகத்தில் இருந்தவர்கள். ஆனால், திமுக அமைச்சர்கள் ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். இந்த அமைச்சரவை மாற்றம் ஒரு குடும்பத்துக்கான வாய்ப்பு, அவ்வளவுதான்.

அம்மா (ஜெயலலிதா) இருக்கிறபோது ஒரு தவறு செய்துவிட்டால் அது யாராக இருந்தாலும், விடியற்காலையில் பதவி இருக்காது. ஆனால், இன்றைக்கு 12-க்கும் மேற்பட்ட மூத்த அமைச்சர்களே மிகப்பெரிய சர்ச்சையில் சிக்கியுள்ளனர். நிர்வாகத்தை கையில் வைத்துள்ள முதலமைச்சர், மூத்தவர்களை கட்டுப்படுத்த முடியவில்லை. நிதித் துறையை கையாண்டதில் பிடிஆர் அனுபவசாலிதான்... அதை மறுக்க முடியாது. திமுக தேர்தல் அறிக்கையில் சொன்னவற்றை நடைமுறைப்படுத்துவது சாத்தியமில்லை என அவர் வெளிப்படையாகவே சொன்னார்.

cm stalin

பிடிஆரின் துறையை மட்டும் மாற்றியதால் திமுக தப்பித்துவிட்டது. ஒருவேளை அவரை அமைச்சரவையில் இருந்து நீக்கியிருந்தால் மிகப்பெரிய சிக்கலை திமுக சந்தித்திருக்கும். அவர் சொன்ன 30 ஆயிரம் கோடி குற்றச்சாட்டை அவரே பின் மறுத்தார். ஆனால், ஏன் வழக்கு போடவில்லை? இவர்கள் செய்திருக்கிற தவறை வெளிப்படையாக அவர் சொன்னதன் விளைவாக அவர் மாற்றப்பட்டிருக்கிறார்.

அதிமுக ஆட்சியில் அமைச்சர்களும் அதிகாரிகளும் இணைந்து செயல்பட்டனர். ஆனால் இன்று முழுக்கு முழுக்க அதிகாரிகள் கையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. நிதியமைச்சராக இருந்த பிடிஆரை நீக்கியிருக்கவே கூடாது. அவரை நீக்கியது மிகப்பெரிய தவறு”

பல்வேறு விஷயங்களை கருத்தில் கொண்டுதான் அமைச்சரவை மாற்றப்படுகிறது. அதில், இந்த விசயத்திற்காக தான் பிடிஆர் மாற்றப்பட்டார் என்று சொல்வது சரியான வாதமா?

பதிலளிக்கிறார் வலதுசாரி ஆதரவாளர் ரமேஷ் சேதுராமன்...

“இந்த அமைச்சரவை மாற்றம் எப்படி நடந்திருக்கிறது என்பது நமக்கே நன்றாகத் தெரியும். மியூசிக்கல் சேர் மாதிரிதான் இந்த அமைச்சரவை மாற்றம் நிகழ்ந்துள்ளது. அமைச்சரவையில் இது பெரிய மாற்றம் ஒன்றும் கிடையாது. பாஜக ஆளும் மாநிலங்களில் அமைச்சரவையை மாற்றும் போது எந்த விளக்கமும் சொல்வதில்லை என்பது உண்மைதான். அதற்காக இவர்களும் விளக்கம் சொல்லாமல் இருப்பது ஏற்புடையதல்ல.

cm stalin

அமைச்சரவை மாற்றம் நிகழ்ந்ததற்கு ஒரு காரணம் சொல்லப்படுது. பிடிஆர்-ஐ, ஆடியோ விவகாரத்துக்காக மாற்றவில்லை என்று சொல்றாங்க.

ஆனால், ஆடியோ விவகாரம் வெளியே வந்தபோதே பிடிஆர் மாற்றப்படலாம் என்ற தகவல் வந்தது. அதன்பிறகு இந்த மாற்றம் நிகழ்ந்துள்ளதால் ஆடியோ விவகாரம் முக்கிய காரணமாக இருக்குமோ என எண்ண தோன்றுகிறது”