தமிழ்நாடு

சத்தியமங்கலம்: ஊரடங்கால் வெறிச்சோடிய சாலைகள் - கூட்டமாக சுற்றித்திரியும் காட்டு யானைகள்

சத்தியமங்கலம்: ஊரடங்கால் வெறிச்சோடிய சாலைகள் - கூட்டமாக சுற்றித்திரியும் காட்டு யானைகள்

kaleelrahman

முழு ஊரடங்கால் வெறிச்சோடிய சத்தியமங்கலம் மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் கூட்டம் கூட்டமாக காட்டு யானைகள் சுற்றி திரிகின்றன.

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுபடுத்த முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக அத்தியாவசிய பொருட்களை ஏற்றிச் செல்லும் வாகனங்களை தவிர மற்ற வாகனங்களுக்கு அனுமதி இல்லாததால் தமிழக கர்நாடக மாநிலத்தை இணைக்கும் சத்தியமங்கலம் - மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் வாகன போக்குவரத்தின்றி வெறிச்சோடி காணப்படுகிறது.

இந்நிலையில், சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதி வழியாக அமைந்துள்ள சத்தியமங்கலம் - மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் அவ்வப்போது யானை உள்ளிட்ட வனவிலங்குகள் நடமாடுவது வழக்கம். தற்போது ஊரடங்கு காரணமாக தேசிய நெடுஞ்சாலை வெறிச்சோடி காணப்படுவதால் ஆசனூர் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய காட்டு யானைகள் தேசிய நெடுஞ்சாலையில் கூட்டம் கூட்டமாக தனது குட்டிகளுடன் ஜாலியாக சுற்றித் திரிகின்றன.

இதையடுத்து இன்று காரப்பள்ளம் வன சோதனைச்சாவடி பகுதியில் ஐந்துக்கும் மேற்பட்ட காட்டு யானைகள் தேசிய நெடுஞ்சாலையில் அங்கும் இங்கும் நடந்தபடி சுற்றித் திரிந்தன. யானைகள் சாலையில் சுற்றித் திரிவதால் அத்தியாவசிய பொருட்களான காய்கறி பால் உள்ளிட்ட பொருட்களை ஏற்றிச் செல்லும் வாகன ஓட்டிகள் சாலையில் நடமாடும் யானைகளை கண்டு அச்சமடைந்துள்ளனர்.

காட்டுயானைகள் சாலையில் பயணிக்கும் வாகனங்களைப் பற்றி கவலைப்படாமல் தனது குட்டிகளுடன் கூட்டம் கூட்டமாக சுற்றித்திரிவதை வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர். அத்தியாவசிய பொருட்களை கொண்டு செல்லும் வாகன ஓட்டிகள் யானை உள்ளிட்ட வனவிலங்குகள் சாலையில் நடமாடுவதை கண்டால் வாகனத்தை நிறுத்தி வனவிலங்குகள் சாலையை கடந்தபின் செல்லுமாறு அறிவுறுத்தி வருகின்றனர்.