எடப்பாடி பழனிசாமியுடன் விவாதிக்க தயார் உதயநிதி ஸ்டாலின்  pt desk
தமிழ்நாடு

யார் ஆட்சியில் திட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது? “இபிஎஸ் உடன் விவாதிக்க தயார்” - உதயநிதி ஸ்டாலின்

யார் ஆட்சியில் திட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது என விவாதத்திற்கு அழைக்கும் எடப்பாடி பழனிசாமி, என்னை அழைத்தால் தயாராக இருக்கிறேன் என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பதில் அளித்துள்ளார்.

PT WEB

செய்தியாளர்: ராஜ்குமார்

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய விடுதியில் தங்கி பயிலும் வீரர், வீராங்கனைகளுக்கு 'சாம்பியன்ஸ் கிட்' உதவி பொருட்கள் தொகுப்பினை முதல் கட்டமாக 600 பேருக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று வழங்கினார்.

இதில் 86 லட்சம் மதிப்பில் பேக், தெர்மல் பிளாஸ்க், டவல், ஸ்மார்ட் வாட்ச், கேப் உள்ளிட்ட 8 பொருட்கள் உள்ளடக்கி இருப்பதால் விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க உதவியாக இருக்கும். மேலும் ராணிப்பேட்டை மாவட்டத்தில் விளையாட்டு வளாகம், மதுரை மாவட்டத்தில் ஒலிம்பிக் அகாடமி கட்டடம் கட்டும் பணிக்கு துணை முதல்வர் அடிக்கல் நாட்டினார்.

'சாம்பியன்ஸ் கிட்' தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி

இந்த நிகழ்வில் துறை செயலாளர் அதுல்ய மிஸ்ரா, விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் மேகநாத் ரெட்டி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இதைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், “600 வீரர், வீராங்கனைகளுக்கு சாம்பியன்ஸ் கிட் வழங்கப்பட்டு இருக்கிறது. அதேபோல் தமிழகம் முழுவதும் 2,800 பேருக்கு வழங்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். சென்னை அருகே விளையாட்டு நகரம் அமைக்கக் கூடிய பணிகளை வேகப்படுத்த தமிழக அரசு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. இதற்கு நிலம் கையகப்படுத்துவதில்தான் தாமதம் ஏற்பட்டது” என தெரிவித்தார்.

தொடர்ந்து அரசியல் ரீதியாக எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்தார் துணை முதல்வர். முன்னதாக நேற்று ‘யார் ஆட்சியில் நலத்திட்டங்கள் கொண்டு வரப்பட்டது என விவாதிக்க தயாரா?’ என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பி இருந்தார். இதற்கு இன்று பதிலளித்த துணை முதல்வர் “என்னை அழைத்தால் விவாதிக்க தயார்” என பதில் அளித்தார்.

அதேபோல் அரசுத் திட்டங்களுக்கு முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பெயரை வைப்பது பற்றிய இபிஎஸ் விமர்சனத்துக்கு பதிலளித்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், “வேறு யாருடைய பெயரை வைக்க வேண்டும்?” என கேள்வியெழுப்பினார்.