திருச்சி மணப்பாறை அருகே உள்ள நடுக்காட்டுப்பட்டி கிராமத்தில் 2 வயது குழந்தை சுர்ஜித் கடந்த வெள்ளிக்கிழமை மாலை ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்தது. குழந்தையை மீட்கும் பணிகள் அன்று மாலை முதலே தீவிரமாக மேற்கொள்ளப்பட்டது. ஆனால் இதுவரையிலும் குழந்தையை மீட்க முடியவில்லை. பல்வேறு மீட்புக்குழுவினர் முயற்சித்தும் முடியவில்லை. இதற்கிடையே குழந்தை 26 அடியில் சிக்கியிருந்த குழந்தை, 88 அடிக்கு கீழே இறங்கியுள்ளது. சுர்ஜித்திற்காக தமிழகம் முழுவதும் பலரும் பிரார்த்தனைகளை செய்து வருகின்றனர்.
குழந்தையை மீட்க ரிக் இயந்திரங்கள் கொண்டு வரப்பட்டு தோண்டும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. முதல் ரிக் இயந்திரம் தோண்டும் பணியில் தொய்வு ஏற்பட்டதால், இரண்டாவதாக ராமநாதபுரத்தில் இருந்து அதிநவீன ரிக் இயந்திரம் கொண்டுவரப்பட்டுள்ளது. அதை தோண்டுவதற்காக பொறுத்தும் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. குழந்தையை மீட்கும் இடத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் உள்ளிட்டோர் தொடர்ந்து களத்தில் இருந்து வருகின்றனர்.
இந்நிலையில் நடுக்காட்டிப்பட்டியில் நடைபெற்று வரும் மீட்புப் பணிகளை துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பார்வையிட்டு வருகிறார். துணை முதலமைச்சருடன் அவரது மகனும் தேனி மக்களவைத் தொகுதி எம்பியுமான ஓ.பி.ரவீந்தரநாத் குமார் வந்துள்ளார். துணை முதலமைச்சருக்கு அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் மீட்புப் பணிகள் குறித்த விளக்கத்தை அளித்து வருகின்றனர்.
அத்துடன் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் குழந்தையின் பெற்றொருக்கு நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தார். ஆறுதல் தெரிவித்த பிறகு மீட்புப் பணிகளை அங்கேயே அமர்ந்து தற்போது துணை முதல்வர் பன்னீர் செல்வம் பார்வையிட்டு வருகிறார்.