துணை முதலமைச்சர் உதயநிதி pt web
தமிழ்நாடு

எப்படி இருக்கிறது சென்னை? ஆய்வு மேற்கொண்டபின் செய்தியாளர்களை சந்தித்த துணை முதல்வர் உதயநிதி!

“மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்காமல் இருக்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது” என கட்டுப்பாடு மற்றும் கண்காணிப்பு மையத்தை பார்வையிட்ட பின்னர் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

PT WEB

செய்தியாளர் சந்தானகுமார்

தென்மேற்கு வங்கக்கடலில் நேற்று காற்றழுத்த தாழ்வு பகுதி உருவான நிலையில் சென்னையில் நேற்று இரவு முதல் தற்போது வரை பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில், சென்னை ரிப்பன் மாளிகையில் உள்ள ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்தினை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பார்வையிட்டார்.

மேலும், மழை முன்னெச்சரிக்கை மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகளையும் உதயநிதி ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ் குமார் மற்றும் ஆணையாளர் குமரகுருபரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர். ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்தில் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளை அதிகாரிகள் துணை முதலமைச்சரிடம் விளக்கினர்.

329 நிவாரண மையங்கள், 120 உணவு தயாரிக்கும் மையங்கள்

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த உதயநிதி ஸ்டாலின், “அடுத்த நான்கு நாட்களுக்கு பல்வேறு மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை கொடுக்கப்பட்டு உள்ளது. சாராசரியாக சென்னையில் 3.60 செ.மீ மழை பதிவாகியுள்ளது. தென் சென்னையில் சராசரியாக 5.5 செ.மீ மழையும், அதிகப்பட்சமாக பெருங்குடியில் 7.35 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது. செங்கல்பட்டில் 1.0 செ.மீ, திருவள்ளூரில் 0.6 செ.மீ, காஞ்சிபுரத்தில் 0.5 செ.மீ என சில மாவட்டங்களில் மிதமான மழையும் பெய்திருக்கிறது. ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு மையத்தை ஆய்வு செய்தோம். முன்னெச்சரிக்கை ஏற்பாடு மற்றும் தற்போதைய நிலை குறித்து கேட்டறிந்தோம்.

1494 மோட்டார் பம்புகள் தயார் நிலையில் உள்ளது. 158 அதி விரைவு மோட்டார்கள் தயார் நிலையில் உள்ளது. கண்காணிப்பு அதிகாரிகள் அறிவுறுத்தலின்படியும் அக்டோபர் மாதம் பெய்த மழையின் கருத்தில் கொண்டும் கூடுதல் மோட்டார்களை நிறுவி இருக்கிறோம்.

329 நிவாரண மையங்கள் தயார் நிலையில் உள்ளது. 120 உணவு தயாரிக்கும் மையங்கள் தயார் நிலையில் உள்ளது. அக்டோபர் மாதத்தில் 95 ஆக இருந்த நிலையில் தற்போது அதன் எண்ணிக்கையை உயர்த்தி இருக்கிறோம்.

மக்களிடம் இருந்து பெரிய புகார் ஏதும் வரவில்லை

கணேசபுர சுரங்கப்பாதையை தவிர மற்ற 21 சுரங்கப்பாதைகளிலும் தண்ணீர் தேங்கவில்லை. கணேசபுரம் சுரங்க பாதையில் ரயில்வே பணிகள் நடைபெற்று வருவதால் அந்த சுரங்க பாதை மூடி வைக்கப்பட்டுள்ளது. காலை 9.30 மணி வரை எந்த பகுதியிலும் தண்ணீர் தேங்கவில்லை. தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். மக்கள் ஒத்துழைப்பு வழக்குமாறு கேட்டுக் கொள்கிறோம். மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்காமல் இருக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தொடர்ந்து கண்காணிப்புப் பணி: உதயநிதி

பிரதான 3 கால்வாய்களில் வேலை நடைபெற்று வருகிறது. விரைவில் அந்த பணிகள் நிறைவு பெறும். திருச்சி, மதுரை, தஞ்சாவூரில் இரண்டு நாட்களாக மழை பெய்து வந்தது. அடுத்து எழிலகம் சென்று பார்வையிட்ட பிறகாக நான் கூறுகிறேன். இப்போதைக்கு சென்னை காஞ்சிபுரம் உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மழை எதிர்பார்க்கப்படுகிறது.

பொது மக்களிடம் பெரிய புகார் ஏதும் வரவில்லை. சமூக வலைதளங்கள் மூலம் மக்கள் புகார் அளிக்கிறனர். அதுவும் உடனடியாக சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பெரிய அளவாக தொலைபேசி வாயிலாக புகார் ஏறும் வரவில்லை. சென்னை மாநகராட்சி அதிகாரிகள் 22,000 பேர் தயார் நிலையில் உள்ளனர்” என தெரிவித்தார்.