Medical college hospital pt desk
தமிழ்நாடு

திண்டுக்கல் மாவட்டத்தில் பரவும் டெங்கு காய்ச்சல் - அரசு மருத்துவமனையில் 45 பேருக்கு சிகிச்சை

திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 4 பெண்கள், 1 சிறுவர் உட்பட 5 பேரும், தனியார் மருத்துவமனையில் 2 பேர் என மொத்தம் 7 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

webteam

செய்தியாளர்: காளிராஜன் த

திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் குறித்து திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மருத்துவ கண்காணிப்பாளர் வீரமணி விளக்கம் அளித்துள்ளார்.

திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள வடமதுரை, பழனி, கன்னிவாடி ஆகிய பகுதிகளில் இருந்து காய்ச்சல் காரணமாக சேர்க்கப்பட்டவர்களுக்கு டெங்கு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று வரை 2 குழந்தைகள் ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் என 4 பேர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

இந்நிலையில், இன்று காலை ஒரு குழந்தை மற்றும் ஆண் ஆகியோர் நலம் பெற்று வீடு திரும்பியுள்ளனர். இன்று டெங்குவால் 2 பெண்கள் பாதிக்கப்பட்டு புதிதாக உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Medical camp

இதனையடுத்து திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை காய்ச்சல் பிரிவில் இயங்கி வரும் டெங்கு வார்டில் ஒரு குழந்தை 4 பெண்கள் என மொத்தமாக 5 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் தனியார் மருத்துவமனையில் 2 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தற்போது வரை காய்ச்சல் காரணமாக 12 குழந்தைகள் உட்பட 45 நபர்கள் உள் நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும், டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் தீவிரமாக கண்காணிக்கப்படுவதாகவும் மேலும், பாதிக்கப்பட்டவர்களுக்கு டெங்கு தாக்கம் குறைவாக இருப்பதால் டெங்கு காய்ச்சலுக்காக ஒதுக்கப்பட்டுள்ள பொது வார்டில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

திண்டுக்கல் மாவட்ட சுகாதாரத்துறை இயக்குனர் மருத்துவர் வரதராஜன் கூறியபோது...

Medical camp

”திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் காய்ச்சல் என மருத்துவமனைக்கு வருகின்றனர். அனைத்து இடங்களிலும் நடமாடும் மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.

குறிப்பாக டெங்கு பாதிப்பு இருக்கும் பொழுது அப்பகுதியில் சிறப்பு மருத்துவ முகாம் உடனடியாக ஏற்பாடு செய்யப்பட்டு அங்கு டெங்கு ஒழிப்பு மருந்து தெளித்தல், தூய்மைப் பணியாளர்கள் மூலம் அப்பகுதி சுத்தம் செய்தல் போன்ற அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது” எனத் தெரிவித்தார்.