nipah virus file image
தமிழ்நாடு

தமிழகத்தில் டெங்கு.. கேரளத்தில் நிபா.. அதிர்ச்சியில் மக்கள்!

கேரளத்தில் நிபா வைரஸ் தொற்று பரவிவரும் நிலையில், தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் விஸ்வரூபம் எடுத்துள்ளது மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

PT WEB

கொரோனா வைரஸின் கோரப்பிடியில் இருந்து தப்பினோம் என்று மக்கள் பெருமூச்சிவிடும் நேரத்தில் ‘இந்தா வந்துட்டேன்ல’ என்றபடி பரவத் தொடங்கியுள்ளது நிபா வைரஸ். கேரளத்தில் தீவிரமாக தொடங்கியுள்ள இந்த வைரஸ் பரவலை கண்டு அதிரும் அதே நேரத்தில் தமிழகத்தில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கையும் வெகுவாக உயர்ந்துள்ளது.

டெங்கு காய்ச்சல்

தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலின்படி கடந்த 13 நாட்களில் மட்டும் 204 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர். நாளொன்றுக்கு சராசரியாக 15 - 20 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதற்கான தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வந்தாலும், காய்ச்சல் அறிகுறிகள் இருந்தால் மருத்துவர்களை அணுகுமாறு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இதே போன்று கேரளத்தில் நிபா வைரஸ் பரவி வருவதால் தமிழக எல்லை மாவட்டங்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக வைரஸ் பாதிப்பு அதிகம் இருக்கும் கோழிக்கோடு மாவட்டத்தில் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் இன்றும், நாளையும் விடுப்பு அளிக்கப்பட்டுள்ளது. நிபா வைரஸ் பரவாமல் இருக்க முகக்கவசம், கைகளை அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும் என அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.

மேலும் காய்ச்சல், வாந்தி, தொண்டைவலி போன்றவை நிபா வைரஸ் தொற்றுக்கு ஆரம்ப அறிகுறி என்றும், சாதாரண காய்ச்சல், மூட்டுவலி, தசைவலி போன்றவை டெங்குவிற்கான ஆரம்ப கட்ட அறிகுறி என்றும் மருத்துவர்கள் கூறுகின்றனர். இதுபோன்ற அறிகுறிகள் ஏற்பட்டால் மருத்துவர்களை அணுகி சிகிச்சை எடுக்க வேண்டும் என்பதே நிபுணர்களின் அறிவுரையாக உள்ளது.