டெல்டா ப்ளஸ் கொரோனா பரிசோதனை மையங்களை சென்னை, மதுரை, கோவை நகரங்களில் அமைக்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார் என நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார்.
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் 32 லட்சம் மதிப்பீட்டில் நிமிடத்திற்கு 200 லிட்டர் உற்பத்தி திறன் கொண்ட ஆக்சிஜன் உற்பத்தி இயந்திரத்தை வணிகவரித் துறை அமைச்சர் மற்றும் நிதி அமைச்சர் ஆகியோர் திறந்து வைத்தனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசும்போது...
திமுக தலைமையில் தமிழகத்தில் ஆட்சி அமைந்தபோது கொரோனா பரவல் மிகுந்து இருந்தது. அதனை வகைப்படுத்தியும், ஆக்சிஜன் பற்றாக்குறையை சரி செய்தும் மீண்டும் மூன்றாம் நிலையில் அதன் பற்றாக்குறை நிரந்தரமாக ஏற்படக்கூடாது என்பதற்காக பல்வேறு முயற்சிகளை அரசு மேற்கொண்டு வருகிறது.
அந்த வகையில் மதுரையில் நான்கு இடங்களில் ஆக்சிஜன் உற்பத்தி இயந்திரங்கள் அமைக்க திட்டமிடப்பட்டு, தற்போது இரண்டு செயல்பட்டு வருகிறது. மதுரையில் மே 26-ஆம் தேதி 1166 பேருக்கு இருந்த கொரோனா தொற்று தற்போது 70 பேர் என தொற்று குறைந்துள்ளது. பொதுமக்களின் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தவும், கண்காணிக்கவும் மதுரை மாநகர் பகுதிகளில் பறக்கும் படைகன் அதிகரிக்கப்பட்டுள்ளது.
பெங்களூருவில் உள்ள டெல்டா ப்ளஸ் கொரோனா பரிசோதனை மையம்போல் தமிழகத்தில் சென்னை, மதுரை கோவை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் டெல்டா ப்ளஸ் கொரோனா பரிசோதனை மையம் அமைக்க அமைச்சரவை கூட்டத்தில் முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
அதேபோல தனியார் மருத்துவமனையில் கூடுதல் கட்டண வசூல் குறித்து கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. ஆதாரபூர்வமான குற்றச்சாட்டுகளை கண்டறிந்து தீர்வுகாண முடியும். தனி நபர்கள் அளித்த புகாரின்படி மதுரையில் உள்ள 12 தனியார் மருத்துவமனையில் கொரோனாவிற்கு கூடுதல் கட்டணம் வசூலித்தது கண்டறியப்பட்டு அவர்களிடமிருந்து பணத்தை பெற்று உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது." என்றார்.